இலங்கைக்கான கனேடிய உயர்ஸ்தானிகர் ஷெல்லி விட்டிங் (shelley whiting)மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் ஆகியோருக்கிடையில் இன்று சந்திப்பொன்று இடம்பெற்றது. இன்று காலை 9.30 மணியளவில் முதலமைச்சர் அலுவலகத்தில் இடம்பெற்ற சந்திப்பில் சுகதார அமைச்சர் ஏ.எல்.எம் நசீர் ,கல்வியமைச்சர் எஸ் தண்டாயுதபானி மற்றும் மற்றும விவசாயத்துறை அமைச்சர் கே.துரைராஜசிங்கம் ஆகியோரும் கலந்து கொண்டனர்
இதன் போது யுத்ததால் அதிகம் பாதிக்கப்பட்ட மாகாணங்களில் ஒன்றான கிழக்கு மாகாணத்தில் வசிப்பவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்துவது ,மீள்குடியேற்ற செயற்பாடுகள் மற்றும் அரசியல் யாப்பில் அதிகார பங்கீடு தொடர்பான கலந்துரையாடல்களும் முன்னெடுக்கப்பட்டுள்ளன. மேலும் கிழக்கு மாகாணத்தில் யுத்ததால் பாதிக்கப்பட்டு அங்கவீனமானவர்கள், கணவனை இழந்த பெண்கள் மற்றும் இடம்பெயர்ந்நதவர்களின் வாழ்க்கையை கட்டியெழுப்புவது தொடர்பில் கனேடிய உயர்ஸ்தானிகருடன் கலந்துரையாடப்பட்டுள்ளதென கிழக்கு மாகாண சபையின ஊடகக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும் கிழக்கின் சுற்றுலாத்துறையின் முன்னேற்றத்திற்கு கனடா உதவிகளை வழங்கி வரும் நிலையில் அதனை தொடர்ந்தும் முன்னெடுப்பது தொடர்பிலும் இங்கு ஆராய்ப்பட்டுள்ளது எனவும் இலங்கையில் தற்போது அரசியல் யாப்புத் திருத்தப் பணிகள் முன்னெடுக்கப்படும் நிலையில் அதிகாரப் பங்கீடு தொடர்பில் கனடாவின் அனுபவங்கள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை கிழக்கு மாகாணத்தில் உள்ள மூன்று மாவட்டங்களிலும் ஆங்கில மொழிக் கற்கை நிலையங்கள் மற்றும் தகவல் தொழில் நுட்ப நிலையங்களை உருவாக்குவது தொடர்பிலும் இந்த சந்திப்பில் ஆராயப்பட்டுள்ளன எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.