குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கிளிநொச்சிக்கு நேற்று ஞாயிற்றுக்கிழமை 04-12-2016 விஜயம் மேற்கொண்ட மத்திய சுகாார சேவைகள் பணிப்பாளா் நாயகம் வைத்தியா் பாலித மகிபால மத்திய அரசின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் 75 மில்லியன் ரூபா பெறுமதியிலான் மருத்துவ உபகரணங்களை வழங்கி வைத்துள்ளாா்.
இந்த நிகழ்வு கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்றது. அத்தோடு தற்போது கிளிநொச்சி மாவட்ட வைத்தியசாலையில் இடம்பெற்று வருகின்ற புனரமைப்பு பணிகளையும் பாா்வையிட்டதோடு,அடுத்த ஆண்டும், மேலதிக புனரமைப்பிற்கான கோரிக்கைகள் முன்வைக்கப்படுமாயின் நிதிஒதுக்கீட்டிற்கான பரிந்துரை மேற்கொள்ளப்படும் எனவும் அவர் வாக்குறுதியளித்தார்.
இதனையடுத்து, மத்திய அரசின் நிதிப்பங்களிப்பின் மூலம் நிர்மாணிக்கப்பட்டு சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தினால் கடந்த ஆண்டு திறந்துவைக்கப்பட்ட அதிதீவிர சிகிச்சைப்பிரிவு மற்றும் இவ்வாண்டு திறந்துவைக்கப்பட்ட சிசுக்களுக்கான விசேட பராமரிப்பு அலகு ஆகியவற்றிற்கு நேரில் சென்று பாா்வையிட்டதோடு, அங்கு வழங்கப்படும் சேவைகளின் தரம் மற்றும் மேலதிக தேவைகள் குறித்து வைத்திய நிபுணர்கள் மற்றும் ஆளணியினருடன் கலந்துரையாடினாா்
மேலும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் வைத்தியர் பாலித மகிபால கிளிநொச்சி மாவட்டத்தின் உருத்திரபுரம் மற்றும் ஊற்றுப்புலம் ஆகிய கிராமங்களுக்கு நேரில் சென்று நிலமைகளை அவதானித்ததுடன், சுகாதார சேவையின் களப்பணி உத்தியோகத்தர்கள் மற்றும் பணியாளர்களைச் சந்தித்து அண்மைய நாட்களில் எமது மாவட்டம் எதிர்கொண்ட இயற்கைச்சவால்களின்போது மக்களுக்கு அவர்கள் ஆற்றிய உதவிகளுக்கு சுகாதார அமைச்சின் சார்பில் தனது நன்றிகளையும் பாராட்டுகளையும் தெரிவித்துக்கொண்டார்.
அதேவேளையில், கடந்த 23.11.2016 அன்று பிரதம தொற்று நோயியல் நிபுணர் வைத்தியர் பபா பலிகவடன மற்றும் இரு விசேட தொற்றுநோயியல் நிபுணர்களை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் கிளிநொச்சி மாவட்டத்திற்கு அனுப்பி முன்னாயத்த நடவடிக்கைகள் குறித்த தாயார்நிலையை ஏற்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது. அக்குழுவினர் உருத்திரபுரம் மத்தி மற்றும் உருத்திரபுரம் சிவநகர் பகுதிகளைப் பார்வையிட்டுத் தேவையான ஆலோசனைகளை வழங்கியிருந்தனர்.
இறுதி நிகழ்வாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் அவர்கள், மாகாண சுகாதார அமைச்சின் செயலாளர் திருவாகரன் மற்றும் மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் கேதீஸ்வரன், கிளிநொச்சி பிராந்திய சுகாதார சேவைகள் பிரதிப் பணிப்பாளா் மருத்துவா் கார்த்திகேயன் ஆகியோருடன் இணைந்து, கிளிநொச்சி மாவட்டப் பொது வைத்தியசாலையின் வைத்திய நிபுணர்கள், வைத்தியர்கள், தாதிய உத்தியோகத்தர்கள், துணை மருத்துவ சேவையாளர்கள் மற்றும் சுகாதாரப் பணி உதவியாளர்கள் ஆகியோரைத் தனித்தனியாகச் சந்தித்து அவர்களது அர்ப்பணிப்பான சேவைகளைப் பராட்டியதுடன் அவர்களது கோரிக்கைகளையும் அவதானமாகச் செவிமடுத்து அதற்குரிய தீர்வுகள் குறித்து உடனுக்குடன் தமது வழிகாட்டல்களை வழங்கினார்.