இந்தியாவின் தமிழ்நாடு மற்றும் கேரள மாநில எல்லைப் பகுதியில் பாசறை அமைத்துள்ள மாவோயிஸ்ட் போராளிகள் சிறுவர்கள் மற்றும் சிறுமியருக்கு ஆயுதப் பயிற்சி அளிக்கும் வீடியோ வெளியாகியுள்ளது.கோவை மாவட்டத்தை ஒட்டியுள்ள தமிழக எல்லையான மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் மாவோயிஸ்ட் இயக்கத்தினர் முகாமிட்டுள்ளனர். இதேவேளை வனப் பகுதிகளிலும், மலைக் கிராமங்களிலும் தமிழக காவல்துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளதாக கூறுகின்றனர்.
கேரளாவில் அட்டப்பாடி, முள்ளி, வயநாடு ஆகிய இடங்களைத் தளமாகக்கொண்டு மாவோயிஸிட்டுக்கள் இயங்குகின்றனர். இதனால், கேரள காவல்துறைக்கும் மாவோயிஸ்ட்களுக்கும் இடையே மோதல் இடம்பெறுகின்றது.
பழங்குடி மக்களுக்கு ஆயுதப் பயிற்சி அளித்து தங்களுடன் சேர்த்துக்கொள்ளும் வீடியோ பதிவு ஒன்று கடந்த டிசம்பரில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோ பதிவில் சிறுவர், சிறுமியருக்கு மாவோயிஸ்ட்கள் ஆயுதப் பயிற்சி அளிக்கின்றனர்.
மேலும், தளம் அமைப்பதற்கான பணிகளில் ஈடுபடுவது, கொடி யேற்றுவது கர்நாடக மாவோயிஸ்ட் இயக்கத் தலைவர் விக்ரம் கவுடா, அந்த முகாமில் பங்கெடுப்பது போன்ற காட்சிகளும் அதில் இடம்பெற்றுள்ளன.
தண்டர்போல்ட் பொலீஸாரிடம் இருந்து வெளியாகியிருக்கும் இந்த வீடியோ காட்சிகளை அடிப்படையாக வைத்து, தமிழக பொலீஸாரும் கண்காணிப்பை பலப்படுத்தியுள்ளனர்.