குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவரின் படுகொலை தொடர்பான விசாரணை அறிக்கைகளை குற்றபுலனாய்வு துறையினர் நீதிமன்றில் சமர்ப்பிக்காதது காலம் தாழ்த்தி வருவது , வழக்கினை திசை திருப்பும் நோக்கமா என குற்றபுலனாய்வு பிரிவு அதிகாரியிடம் யாழ் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் கேள்வி எழுப்பி உள்ளார்.
யாழ்.கொக்குவில் குளப்பிட்டி சந்திக்கு அருகில் கடந்த ஒக்டோபர் மாதம் 20ம் திகதி நள்ளிரவு பொலிசாரின் துப்பாக்கி சூட்டுக்கு இலக்கி யாழ்.பல்கலைகழக மாணவர்கள் இருவர் உயிரிழந்து இருந்தனர். அது தொடர்பில் யாழ்ப்பாண காவல் நிலையத்தை சேர்ந்த ஐந்து காவல் துறை உத்தியோகஸ்தர்கள் கைது செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவின் பேரில் கைது செய்யப்பட்டு விளக்க மறியலில் வைக்கப்பட்டு உள்ளனர்.
அது தொடர்பிலான வழக்கு விசாரணை இன்று வெள்ளிக்கிழமை யாழ்.நீதிவான் நீதிமன்றில் நீதிவான் எஸ்.சதிஸ்தரன் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
அதன் போது ஐந்து சந்தேகநபர்களும் நீதிமன்றில் முற்படுத்தப்பட்டனர். அதன் போது கடந்த வழக்கு தவணையின் போது , நீதிவானால் கோரப்பட்ட அறிக்கைகள் எதனையும் குற்ற புலனாய்வு துறையினர் மன்றில் சமர்ப்பிக்கவில்லை.
கடந்த தவணையின் போது , குறித்த சம்பவத்தை விபத்தாக பதிவு செய்தது ஏன் ? விபத்தாக பதிவு செய்ய கூறியது யார் ? மாணவர்களை சுடுவதற்கு பயன்படுத்திய துப்பாக்கி எது ? காவல்நிலைய ஆயுத களஞ்சிய பொறுப்பாளரிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணை அறிக்கை , உயிரிழந்த மாணவர்களின் பெற்றோரை அழைத்து விசாரித்தமை தொடர்பில் முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகரிடம் நடாத்தப்பட்ட விசாரணை தொடர்பான அறிக்கை உள்ளிட்ட அறிக்கைகளை இன்றைய வழக்கு விசாரணையின் போது மன்றில் குற்றபுலனாய்வு துறையினர் சமர்ப்பிக்கவில்லை.
அது தொடர்பில் நீதிவான் கேட்ட போது , விசாரணைகள் இன்னமும் முடிவடையவில்லை எனவும், அது தொடர்பில் தொடர் விசாரணைகளை முன்னெடுத்து வருவதாகவும் , குற்ற புலனாய்வு பிரிவு அதிகாரி மன்றில் தெரிவித்தார்.
அதனை அடுத்து விசாரணை அறிக்கை மன்றில் சமர்பிப்பதற்கு கால தாமதம் ஏற்படுத்துவது வழக்கினை திசை மாற்றும் செயலா ?என கேள்வி எழுப்பிய நீதிவான் விசாரணை அறிக்கைகளை மன்றில் சமர்ப்பிக்குமாறு கூறியதுடன் , முல்லைத்தீவு மாவட்ட சிரேஸ்ட காவல் துறை அத்தியட்சகரை அடுத்த வழக்கு தவணைக்கு மன்றில் சமூகமளிக்குமாறும் தவறின் அடுத்த தவணை பகிரங்க பிடியாணை பிறப்பிக்கப்படும் என நீதிவான் தெரிவித்ததுடன் வழக்கினை எதிர்வரும் 27ஆம் திகதிக்கு ஒத்திவைத்தார். அதுவரையில் ஐந்து சந்தேகநபர்களையும் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு இட்டார்.