ஏமனில் கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு தரப்பு படைகள் இடையே நடைபெற்ற கடுமையான மோதலில் 70 பேர் உயிரிழந்துள்ளனர் . ஏமனில் அரசுக்கும், ஹவுதி கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே கடந்த 2015-ம் ஆண்டு மார்ச் முதல் உள்நாட்டு போர் நடந்து வருகிறது.
தலைநகர் கனா மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளையும் ஹவுதி கிளர்ச்சியாளர்கள் கைப்பற்றி தனி அரசு நடத்தி வருகின்ற நிலையில் ஜனாதிபதி மன்சூர் ஹாதி ஏடனை தலைநகராக சவூதி ஆதரவு கூட்டுப்படைகளின் ஆதரவுடன் கொண்டு ஆட்சி நடத்தி வருகிறார். இதனால் அங்கு 21 மாதங்களாக நடைபெறும் உள்நாட்டு போரில் இதுவரை 10 ஆயிரம் பேர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், ஏமனில் கடந்த இரண்டு நாட்களாக கிளர்ச்சியாளர்கள் மற்றும் அரசு தரப்பு படைகள் இடையே நடைபெற்ற கடுமையான மோதல்கள் இடம்பெற்று வருகின்றன.
சவூதி தலைமையிலான கூட்டுப் படை அல்-மந்தப் பகுதியில் நடத்திய வான்வெளி தாக்குதலில் கிளர்ச்சியாளர்கள் தரப்பில் 52 பேர் கொல்லப்பட்டுள்ளதுடன் அரச தரப்பு படையைச் சேர்ந்த 14 பேர் உயிரிழந்துள்ளனர்.