இன்றையதினம் மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் அமைச்சர் பைஸர் முஸ்தபாவினால் முதலமைச்சர்களுக்காக ஒழுங்கு செய்யப்பட்ட கூட்டத்தில் பங்கேற்காதிருக்க மாகாண முதலமைச்சர்கள் ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த பெப்ரவரி மாதம் 22 ஆம் திகதி மேல்மாகாண முதலமைச்சர் இசுரு தேவப்ரியவின் அலுவலகத்தில் இடம்பெற்ற முதலமைச்சர்களுக்கான கூட்டத்தின் போது இந்த தீர்மானம் மேற் கொள்ளப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமது அமைச்சினூடாக மாகாண சபைகளுக்கான நிதியதிகாரங்களை கட்டுப்படுத்தி உள்ளூராட்சி மன்ற அமைச்சின் ஒரு திணைக்களமாக மாகாண சபைகளை மாற்றுவதற்கு அமைச்சர் பைஸர் முஸ்தபா கடந்த காலங்களில் பிரயத்தனங்களை முன்னெடுத்திருந்தன் காரணமாக எந்த நம்பிக்கையில் அவரது தலைமையிலான கூட்டத்தில் பங்கேற்பதென்ற கேள்வி முதலமைச்சர் மத்தியில் இருந்ததாக கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட் தெரிவித்துள்ளார்.
மாகாண சபைகளுக்கான அதிகாரங்கள் வழங்கப்பட்டு அவை சுயாதீனமாக இயங்கக் கூடிய நிலை உருவாக வேண்டுமென்ற கோரிக்கையை முதலமைச்சர்கள் முன்வைத்து வரும் நிலையில் ஜனாதிபதி மற்றும் பிரதமரும் அதிகாரப் பகிர்வு குறித்து சாதகமான கருத்துக்களை வெளியிட்டு வரும் நிலையில் இவ்வாறான கூட்டங்களின் மூலம் மாகாண சபைகளின் அதிகாரங்களை முடக்குவதற்கு மத்திய அரசின் அமைச்சர்கள் முயற்சிப்பதாகவே இதனை முதலமைச்சர்கள் கருதுவதாகவும் கிழக்கு முதலமைச்சர் தெரிவித்துள்ளார்.