யாழ்ப்பணத்திற்கு சென்ற ஜனாதிபதி யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த போராட்டகார்களை கவனத்தில் எடுக்காது சென்று இருந்தமை போராட்டகாரர்கள் மத்தியில் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தது.
யாழ்ப்பணத்திற்கு சென்ற ஜனாதிபதி வடமாகாண ஆளுனர் அலுவலகத்தில் ‘ ஜனாதிபதியிடம் சொல்லுங்கள் ‘ அலுவலகத்தை திறந்து வைத்தார். அலுவலக திறப்பு விழாவுக்கு வந்த ஜனாதிபதியின் கவனத்தை ஈர்க்கும் முகமாக யாழ்.மாவட்ட செயலகம் முன்பாக காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் காலை முதல் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர்.
அதேவேளை வேலை கோரி பட்டதாரிகள் இன்றைய தினம் ஆறாவது நாளாகவும் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்தனர். வடமாகாண ஆளுனர் அலுவலகம் செல்லும் போது இரு போராட்டக்கார்களையும் காணுவதனை தவிர்த்து மாற்று பாதையூடாக அலுவலகம் உள்ளே சென்று இருந்தார்.
தம்மை காணாது ஜனாதிபதி அலுவலகம் உள்ளே சென்றமையால் வடமாகாண சபை உறுப்பினர் எம்.கே.சிவாஜிலிங்கம் தலைமையில் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்கள் வீதியில் இறங்கி யாழ்.- கண்டி நெடுஞ்சாலையை மறித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் போலீசார் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களை வீதியில் இருந்து அப்புறப்படுத்தினர்.
பின்னர் ஜனாதிபதி அலுவலக திறப்பு விழாவை முடித்துக்கொண்டு போராட்டகார்கள் இருந்த திசையால் செல்லாது மாற்று பாதையூடாக ஆளுனர் அலுவலகத்தில் இருந்து வெளியேறி சென்றார். இதனால் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த இரண்டு தரப்பினர் மத்தியில் கொந்தளிப்பு ஏற்பட்டது.