தெற்காசிய நாடுகளுடன் ஒப்பிடுகையில் இலங்கைப் பெண்களுக்கு அதிக சுதந்திரம் கிடைக்கப் பெற்றிருந்தாலும், இலங்கைப் பெண்களில் அதிகமானோர் வீட்டு அலுவல்களுடன் சுருங்கிக் காணப்படுகின்றமையால், இலங்கையின் ஊழியப் படையில் பெண்களின் சதவீதத்தினை அதிகரிக்க நாம் மேலும் பல நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது என பிரதமர் ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
இல்லத்தரசியாக, தாயாக, மனைவியாக குடும்பத்தில் தனது பணிகளை ஆற்றுவதுடன், பெண்ணிடம் காணப்படும் உடல், உள, ஆன்மீகப் பலம் ஊடாக பாரிய சமூகப் பணியை ஆற்றும் திறனும் அவளுக்கு காணப்படுகிறது. அதற்குத் தேவையான சுதந்திரம், அங்கீகாரம், தைரியம் மற்றும் வாய்ப்புக்களைப் பெற்றுக் கொடுப்பது நமது பொறுப்பாகும் என தெரிவித்த பிரதமர் அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகரித்துக் காணப்பட்டாலும், அவளுக்கு சமமான உரிமைகள், கண்ணியம், மதிப்பீடு கிடைக்கின்றதா என்பது குறித்து பொறுப்புடன் சிந்தித்துப் பார்ப்பது அவசியமாகும் எனவும் தெரிவித்துள்ளார்.
நவீன உலகில் பெண்ணின் வகிபாகத்தை சிறப்பாக விளங்கிக் கொண்டு, அதனோடு இணைந்த சமமான இடத்தைப் பெற முடியுமான ஊக்கமுள்ள பெண்களை எமது நாட்டினுள் உருவாக்க அரசாங்கமும், மொத்த சமூகமும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் எனவும் ‘முக்காலத்தையும் அறிந்தவள் – பலத்தினால் வெற்றி கொள்பவள்’ எனும் இவ்வருட சர்வதேச மகளிர் தின கருப்பொருள் அதற்கான விரிவான நோக்கை வழங்கும் என எதிர்பார்க்கிறேன் என தெரிவித்துள்ளார்.