வேலூர் பெண்கள் சிறையில் தண்ணீர் வசதி இல்லாததால் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் சிறையில் உள்ள நளினி 4 நாட்கள் தொடர் உண்ணாவிரதம் இருந்துள்ளார். ராஜீவ்காந்தி கொலை வழக்கில் பேரறிவாளன், முருகன் உள்ளிட்டோர் வேலூர் ஆண்கள் சிறையிலும், முருகனின் மனைவி நளினி பெண்கள் சிறையிலும் இருந்து வருகின்ற நிலையில் ; பெண்கள் சிறையில், குடிநீர் வசதி செய்து தர வேண்டும் என்று கோரி நளினி கடந்த வாரம் புதன்கிழமை முதல் சனிக்கிழமை வரை தொடர்ந்து 4 நாட்கள் உண்ணாவிரதம் இருந்துள்ளார்.
மின் மோட்டார் பழுதடைந்துள்ளதாக தெரிவித்து பெண்கள் சிறையில் கடந்த சில நாட்களாக கைதிகளுக்கு நீர் வழங்கப்படாமல் இருந்தமையை அடுத்தே அவர் உண்ணாவிரதத்தை மேற்கொண்டுள்ளார். இந்தநிலையில் சிறை அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி தண்ணீர் வசதி ஏற்படுத்தி கொடுத்ததனையடுத்து அவர் உண்ணாவிரதத்தை; கைவிட்டதாக தெரிவிக்கப்படுகின்றது.