224
கிளிநொச்சி சிறுவர் நன்நடத்தை அதிகாரிகளை அவர்களது மாவட்ட அலுவலகத்தில் வைத்து பூட்டிய பெற்றோர்களை எச்சரித்து அனுப்பியது கிளிநொச்சி நீதவான் நீதிமன்றம். குறித்த சம்பவம் நேற்று வியாழக்கிழமை ( 30-03-2017 ) இடம்பெற்றது.
நீதிமன்றின் உத்தரவுக்கு அமைய தங்களுடைய பிள்ளைகளை சிறுவர் இல்லத்திற்கு அனுப்பியது தொடர்பில் விளக்கம் அளிக்காது சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் செல்ல முற்பட்ட வேளையே இவ்வாறு அலுவலகதிற்குள் வைத்து பெற்றோர்களால் பூட்டப்பட்டுள்ளனா்.
குறித்த சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வியாழக்கிழமை கிளிநொச்சி நகரில் அமைந்துள்ள பாடசாலையில் கல்வி பயிலும் தரம் ஒன்பது மாணவர்கள் ஏழு பேர் தனியார் காணி ஒன்றினுள் சென்று இளநீர் மற்றும் பலாப்பழம் என்பவற்றை வெட்டியுள்ளனர். இதனை அவதானித்த காணி உரிமையாளர் நேரடியாக குறித்த பாடசாலைக்கு சென்று அதிபரிடம் தகவலை தெரியப்படுத்தி மாணவர்கள் இனி இவ்வாறு நடந்துகொள்ளாமல் பார்த்துக்கொள்ளுங்கள் அறிவுறுத்திவிட்டு சென்றுள்ளார்.
இதனையடுத்து குறித்த அதிபர் ஏழு மாணவர்களை அழைத்து அவர்களிடம் விசாரித்த போது இளநீர் வெட்டிய கத்தியும் அவர்களிடம் காணப்பட்டுள்ளது. இந்த நிலையில் குறித்த மாணவர்களிடம் இருந்து தனிதனியாக கடிதங்களை பெற்றுக்கொண்ட அதிபர் உடனடியாக கிளிநொச்சி பொலீஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கியுள்ளார்.
இந்த நிலையில் பாடசாலைக்கு சென்ற பொலீஸார் பாடசாலை மட்டத்தில் பிரச்சினையை தீர்க்க முற்பட்ட போதும் அது சாத்தியமளிக்கவில்லை. இந்நிலையில் சிறுவர் நன்னடத்தை உத்தயோகத்தர்களுக்கு பாடசாலையால் அறிவிக்கப்பட்டு ,அவர்களால் குறித்த விடயம் கிளிநொச்சி நீதவான் நீதிமன்றுக்கு கொண்டு செல்லப்பட்டது. இதனையடுத்து கிளிநொச்சி நீதவான் நீதிமன்றினால் ஏழு சிறுவர்களும் சிறுவர் இல்லத்திற்கு அனுப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் இன்றைய தினம் மீண்டும் நீதி மன்றுக்கு குறித்த ஏழு சிறுவர்களும் கொண்டு வரப்பட்ட போது அவர்களை எதிர்வரும் 21 திகதி வரைக்கும் மூன்று சிறுவர் இல்லங்களில் தங்க வைப்பதற்கு நீதி மன்று பணித்துள்ள நிலையில் சிறுவர்கள் ஏழு பேரும் கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று சிறுவர் இல்லங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
வியாழக்கிழமை பாடசாலையில் இடம்பெற்ற முதலாம் தவணை பரீட்சையை எழுதவிடாது தடுத்து நிறுத்தப்பட்ட குறித்த மாணவா்கள் இன்று வெள்ளிக்கிழமை பரீட்சை எழுத பாடகாலை நிர்வாகத்தினால் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இருந்த போதும் பாடசாலை அதிபரின் இந்த நடவடிக்கைக்கு பெற்றோர்கள் மற்றும் கல்விச் சமூகத்தினால் எதிா்ப்பு வெளியிடப்பட்டுள்ளது. இளநீர் வெட்டி தன்னுடைய பாடசாலை சிறுவர்களை பாடசாலை நிர்வாகம் அதன் ஒழுக்க குழுவை கூட்டி ஒழுக்காற்று நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும் எனவும் அத்தோடு சிறுவர்களின் பெற்றோர்களை அழைத்து அதிபர் கலந்துரையாடியிருக்கவேண்டும் என்றும் ஆனால் அதனை விடுத்து இளநீர் வெடிய குற்றத்திற்காக ஏழு சிறுவர்களையும் நீதி மன்று வரை அனுப்பியிருக்க கூடாது என்றும் தொிவிக்கப்பட்டுள்ளது.
எனவே குறித்த சம்பவம் தொடர்பில் சிறுவர் நன்னடத்தை அதிகாரிகள் தங்களுக்கு தெளிவுப்படுத்தாது செல்ல முற்பட்ட போதே தாங்கள் அலுவலகத்தில் வைத்து பூட்டியதாக பெற்றோர்கள் குறிப்பிட்டுள்ளனா்.
Spread the love