இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் உரையானது புதிய பிரிவிணைவாதத்தை உருவாக்கும் வகையில் அமைந்துள்ளதாக தேசிய பல்கலைக்கழக ஆசிரியர் ஒன்றியம் தெரிவித்துள்ளது. மோடி இலங்கைக்கு பயணம் செய்திருந்த போது நோர்வூட்டில் பெருந்தோட்ட தொழிலாளர் சமூகத்திற்கு ஆற்றிய உரையானது பிரிவினைவாதத்தை உருவாக்கும் வகையிலானது என தெரிவித்துள்ளது. இது தொடர்பில் ஆசிரியர் ஒன்றியத்தின் பொதுச் செயலாளர் டொக்டர் சன்ன ஜயசுமன இது பற்றி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
மோடியின் உரை மலையக பெருந்தோட்ட மக்களை மட்டும் முன்னிலைப்படுத்தும் வகையில் அமைந்தது எனவும் ஏனைய தமிழ் சமூகம் பற்றி பேசவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார். பெருந்தோட்ட மக்கள் இந்திய கலாச்சாரத்தை பின்பற்றுவதாக புகழ்ந்துரைத்த மோடி அதன் ஊடாக, அவர்கள் இலங்கை கலாச்சாரத்துடன் பிணைவதனை மறைமுகமாக தடுத்து நிறுத்த முயற்சிக்கின்றார் என சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்திய புலம்பெயர் சமூகம் என மலையக பெருந்தோட்ட மக்களை அவர் விளித்தமை கண்டனத்திற்குரியது என குற்றம் சுமத்தியுள்ள ஜயசுமன இவ்வாறான பிழைகள் மீளவும் இடம்பெறக்கூடாது எனவும் மலையக பெருந்தோட்ட மக்களை மோடி தமது இந்திய மாநில மக்களாக கருதக் கூடாது எனவும் அவர் தெரிவித்துள்ளார்.