இலங்கை

புதிய எதிர்பார்ப்புக்களுடன் நாட்டை முன்னெடுத்துச் செல்லவே அமைச்சரவை மாற்றம் – ஜனாதிபதி

புதிய எதிர்பார்ப்புக்களுடன் ஒரு நாடு என்ற ரீதியில் முன்னேறிச் செல்வதற்கு அமைச்சரவையில் மாற்றங்களை செய்ததாக ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்தார். அந்த வகையில் நாட்டின் அபிவிருத்திக்காக அர்ப்பணிப்புடன் செயற்படுமாறு புதிதாக பதவிப்பிரமாணம் செய்துகொண்ட அமைச்சர்களிடம் தான் கேட்டுக்கொள்வதாக ஜனாதிபதி தெரிவித்தார்.

புதிய அமைச்சரவை மாற்றத்தின் கீழ் 9 புதிய அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும் இராஜாங்க அமைச்சர் ஒருவரும் இன்று (22) முற்பகல் ஜனாதிபதி அலுவலகத்தில் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன அவர்களின் முன்னிலையில் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர். இந்நிகழ்வில் உரையாற்றும்போதே ஜனாதிபதி மேற்கண்டவாறு தெரிவித்தார்.

அந்த வகையில் மங்கள சமரவீர நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சராகவும் எஸ்.பி. திஸாநாயக்க சமூக வலுவூட்டல், நலன்பேணல் மற்றும் கண்டிய மரபுரிமைகள் அமைச்சராகவும் டபிள்யு.டீ.ஜே.செனவிரத்ன தொழில், தொழில் உறவுகள் மற்றும் சப்ரகமுவ அபிவிருத்தி அமைச்சராகவும் ரவி கருணாநாயக்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சராகவும் மஹிந்த சமரசிங்க துறைமுகங்கள், கப்பற்துறை அமைச்சராகவும் கயந்த கருணாதிலக காணி, பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராகவும் அர்ஜுன ரணதுங்க பெற்றோலிய வளங்கள் அபிவிருத்தி அமைச்சராகவும்  சந்திம வீரக்கொடி  திறன் விருத்தி, தொழிற் பயிற்சி அமைச்சராகவும் திலக் மாரப்பன  அபிவிருத்தி பணிகள் அமைச்சராகவும் பதவிப்பிரமாணம் செய்துகொண்டனர்.

அமைச்சர் மஹிந்த அமரவீர ஏற்கனவே உள்ள மீன்பிடித்துறை அமைச்சுடன் சேர்த்து புதிதாக மகாவலி அபிவிருத்தி இராஜாங்க அமைச்சராக பதவிப்பிரமாணம் செய்துகொண்டார்.

நட்புறவுடனும் அர்ப்பணிப்புடனும் செயற்பட்டு நாட்டின் அபிவிருத்திக்காக கூட்டுப்பொறுப்பை நிறைவேற்ற ஒன்றிணையுமாறு புதிய அமைச்சர்களிடம் தெரிவித்த ஜனாதிபதி, மனிதர்களை நல்லவர்களாக மாற்றுவதன் மூலமே சமூகத்தையும் நாட்டையும் மாற்றுவதற்கு முடியுமென்றும் குறிப்பிட்டார்.

பிரதமர் ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட அமைச்சர்கள், பாராளுமன்ற உறுப்பினர், ஜனாதிபதியின் செயலாளர் பி.பீ.அபேகோன் ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Add Comment

Click here to post a comment

Leave a Reply