சர்வதேச கிரிக்கட் பேரவையின் சம்பியன்ஸ் கிண்ண போட்டித் தொடரில் இந்திய அணி அரையிறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளது. நேற்று லண்டன் ஓவல் மைதானத்தில் தென் ஆபிரிக்க அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் 8 விக்கட்டுகளினால் இந்திய அணி அபார வெற்றியீட்டியது. நாணய சுழற்சியில் வெற்றியீட்டிய இந்திய அணி, தென் ஆபிரிக்காவை துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
இதன்படி களமிறங்கிய தென் ஆபிரிக்க அணி வீரர்கள் சிறந்த ஆரம்பத்தை பெற்றுக் கொடுத்த போதிலும், பின்னர் மத்திய வரிசை வீரர்கள் சோபிக்கத் தவறியதனால் 44.3 ஒவர்களில் சகல விக்கட்டுகளையும் இழந்து 191 ஓட்டங்களை மட்டுமே பெற்றுக்கொண்டனர்.
குயின்டென் டி கொக் 53 ஓட்டங்கைளப் பெற்றுக் கொண்டார். பந்து வீச்சில் பும்ரா மற்றும் புவனேஸ்வர் குமார் ஆகியோர் தலா இரண்டு விக்கட்டுகளை வீழ்த்தினர்.
பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இந்திய அணி 38 ஓவர்களில் இரண்டு விக்கட்டுகளை இழந்து வெற்றி இலக்கை எட்டியது. இதில், சிக்கர் தவான் 78 ஓட்டங்களையும் அணித் தலைவர் விராட் கோஹ்லி ஆட்டமிழக்காது 76 ஒட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.