சிறுபான்மை கட்சிகளின் உதவியின்றி எந்தவொரு கட்சியினாலும் ஆட்சி அமைக்க முடியாது என கல்வி ராஜாங்க அமைச்சர் வீ.ராதகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
நாட்டில் செயற்பட்டு வரும் சிறுபான்மையின மற்றும் சிறு கட்சிகளின் உதவியின்றி எந்தவொரு கட்சியினாலும் தனித்து ஆட்சி அமைக்க முடியாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த யதார்த்தத்தை அனைத்து பிரதான கட்சிகளும் புரிந்து கொள்ள வேண்டுமென வலியுறுத்தியுள்ள அவர் தனிக்கட்சியொன்றை கொண்டு ஆட்சி அமைக்க எவரேனும் விரும்பினால் அது வெறும் பகல் கனவு மட்டுமேயாகும் என குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி பீடம் ஏறுவதற்கு ஒத்துழைப்பு வழங்கிய சிறு மற்றும் சிறுபான்மையின கட்சிகளை பிரதான கட்சிகள் ஆட்சி பீடம் ஏறியதன் பின்னர் மறந்து விடும் நிலைமை நீடித்து வருவதாகக் குற்றம் சுமத்தியுள்ளார்.
அதிகாரங்கள் மற்றும் வரப்பிரசாதங்களை வழங்கும் போது ஆட்சி அமைக்க ஒத்துழைப்பு வழங்கிய தரப்பினருக்கு கிரமமான முறையில் அவை பங்கீடு செய்யப்படுவதில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். தேர்தல் தொகுதிக்கு தாம் கடமையாற்ற வேண்டியிருப்பதாகத் தெரிவித்துள்ள அவர் மக்களுக்கு சேவையாற்றாமல் அவர்களிடம் எவ்வாறு வாக்கு கேட்பது என கேள்வி எழுப்பியுள்ளார்.