குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முல்லைத்தீவு துணுக்காய் அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தில் மேய்ச்சல் தரவையினை உருவாக்கித் தருமாறு இக்கிராமத்தின் கால்நடை வளர்ப்பாளர்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.
கோட்டைக்கட்டியகுளம், அம்பலப்பெருமாள்குளம் ஆகிய கிராமங்களில் ஆயிரம் கால்நடைகள் உள்ள போதிலும் இதற்கான மேய்ச்சல் தரவைகள் இல்லாததன் காரணமாக காலபோகம், சிறுபோகம் என இரு போகங்களிலும் பயிர்ச் செய்கை நடைபெறுவதன் காரணமாக கால்நடைகளை நீண்ட தூரம் கொண்டு சென்று மேய்ச்சலில் ஈடுபடுத்த வேண்டி உள்ளதாக கால்நடை வளர்ப்பாளர்கள் தெரிவித்துள்ளனர்.
மேலும் இதன் போது கால்நடைகளை சிறுத்தைகளின் தாக்குதல்களினால் உயிரிழப்பதாகவும் கால்நடைகளுக்கு நீர் வழங்குதல் போன்ற பல நெருக்கடிகள் உள்ளதாகவும் தெரிவிக்கும் இக்கிராம கால்நடை வளர்ப்பாளர்கள் தமக்கான மேய்ச்சல் தரவையினை உருவாக்கித் தருமாறு கோரியுள்ளனர்.
இது தொடர்பாக துணுக்காய் பிரதேச செயலகத்தில் நடைபெற்ற கூட்டங்களில் கடந்த ஏழாண்டுகளாக மேய்ச்சல் தரவைகளை அமைத்துத் தாருங்கள் என கோரிக்கை விடுத்து வந்தாகவும் இதுவரை அவை நடைபெறவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளனர்.
விவசாயத்தினையும் கால்நடை வளர்ப்பையும் வாழ்வாதாரமாகக் கொண்ட தமது கிராமத்தில் மேய்ச்;சல் தரவை அமைக்கப்படுவது அவசியமாகும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
அம்பலப்பெருமாள்குளம் கிராமத்தில் 110 குடும்பங்களும் கோட்டைக்கட்டியகுளம் கிராமத்தில் 200 குடும்பங்களும் வாழ்கின்ற போதிலும் இக்குடும்பங்களின் வாழ்வாதாரம் கால்நடை வளர்ப்பில் தங்கியுள்ளதன் காரணமாக மேய்ச்சல் தரவை உருவாக்கத்திற்கு அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.