குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
கடந்த மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற பாரிய நிதி மோசடி சம்பவம் தொடர்பில் முன்னாள் நீர்வழங்கல் அமைச்சரும், கூட்டு எதிர்க்கட்சியின் பாராளுமன்றக் குழுத் தலைவருமான தினேஸ் குணவர்தனவிடம் விசாரணை நடத்தப்பட உள்ளது.
அதிகார துஸ்பிரயோகங்கள் மற்றும் பாரிய நிதி மோசடிகள் தொடர்பிலான ஜனாதிபதி ஆணைக்குழுவினால் இந்த விசாரணை நடத்தப்பட உள்ளது.
சுமார் பத்தாயிரம் லட்சம் ரூபா நிதி மோசடி செய்யப்பட்டுள்ளதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. எதிர்வரும் திங்கட்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு ஆணைக்குழுவின் முன்னிலையில் முன்னிலையாகுமாறு தினேஸ் குணவர்தனவிற்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த நிதி மோசடி இடம்பெற்ற காலத்தில் தினேஸ் குணவர்தன அமைச்சராகவும், திணைக்களத் தலைவராக கருணாசேன ஹெட்டியாரச்சியும் கடமையாற்றியுள்ளனர்.
கருணாசேன ஹெட்டியாரச்சியிடம் ஏற்கனவே விசாரணை நடத்தப்பட்டுள்ளது. வெளிநாட்டு நிதி உதவிகள் மற்றும் அரசாங்க நிதி கிடைக்கப் பெற்றுள்ளதாகவும் அதனை உரிய முறையில் பயன்படுத்தவில்லை எனவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.