குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
காவல்துறையினரின் கடத்தல் முயற்சி குறித்து நிதி அமைச்சர் மங்கள சமரவீர அதிருப்தி வெளியிட்டுள்ளார். மாணவ செயற்பாட்டாளர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்து கடத்திச் செல்ல முற்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. வெள்ளைவானில் சிவில் உடையணிந்த பாதுகாப்பு உத்தியோகத்தர்கள் இந்த கடத்தல் முயற்சியில் ஈடுபட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கு எதிராக கருத்து வெளியிட்டு வரும் மாணவர் ஒருவரை கடத்த முயற்சித்தமை பிழையானது என நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் குறித்து காவல்துறை மா அதிபர் பூஜித் ஜயசுந்தரவிடம், நிதி அமைச்சர் முறைப்பாடு செய்துள்ளார். 2015ம் ஆண்டில் இந்த அரசாங்கம் வெள்ளைவான் கலாச்சாரத்தை இல்லாதொழிப்பதாக உறுதியளித்து ஆட்சி பீடம் ஏறியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
இவ்வாறான ஓர் பின்னணியில் மீளவும் வெள்ளைவான் குறித்த பீதியை ஏற்படுத்த காவல்துறையினர் முயற்சிப்பதாகக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்திற்கு களங்கம் ஏற்படுத்த சில தரப்பினர் முயற்சிப்பதாக நிதி அமைச்சர் தெரிவித்துள்ளார்.