மட்டக்களப்பு ஏறாவூர்ப்பற்று பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட பாலாமடு, புத்தம்புரி மற்றும் சின்னப்பொத்தானை ஆற்றுப் பகுதிகளில் இடம்பெறும் மணல் அகழ்வதைக் கண்டித்தும், புலுட்டுமானோடை, வெரச்சியாறு, உடும்புக்கல் ஆறு மற்றும் கார்மலை போன்ற வனப்பகுதிகளில் மரம் வெட்டுவதைத் தடுக்குமாறு கோரியும் , வேப்பவெட்டுவான் பகுதியில் இன்று ஆர்ப்பாட்டமொன்று மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இலுப்படிச்சேனை, வேப்பவெட்டுவான் மற்றும் பாலர்சேனை கிராம அபிவிருத்திச் சங்கள் ஒன்றிணைந்து இந்த ஆர்ப்பாட்டத்தை ஏற்பாடு செய்திருந்தன.
சட்ட விரோதமான முறையில் அளவுக்கு அதிகமாக மணல் அகழப்படுவதால், ஆற்றின் ஆழம் அதிகரித்து, மழைக் காலங்களில் வெள்ளப் பெருக்கு ஏற்படுவதாகவும் நிலம் மற்றும் குடியிருப்புகள் வெள்ளத்தில் மூழ்கும் நிலை ஏற்பட்டுள்ளதாகவும் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டோர் தெரிவித்தனர்.
அகழப்படும் மண்ணை, கனரக வாகனங்கள் மூலம் ஏற்றிச் செல்வதால் வீதிகளும் சேதமடைவதுடன், வீதியில் செல்லும் கால்நடைகளும் விபத்துக்குளாகின்றன எனவும் அவர்கள் தெரிவித்தனர்.