குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யுத்தக் குற்றச் செயல்களில் தான் ஈடுபடவில்லை என முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார். இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தாம் யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக சுமத்தப்படும் குற்றச்சாட்டுக்களில் எவ்வித உண்மையும் கிடையாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
யுத்தக் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கு தாம் ஒத்துழைப்பு வழங்கியதாக சில தரப்பினர் குற்றம் சுமத்தி வருவதில் உண்மையில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். ஜகத் ஜயசூரிய பிரேஸிலுக்கான முன்னாள் தூதுவராக கடமையாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
வைத்தியசாலைகள் மீது தாக்குதல் நடத்தியமை, சித்திரவதைகள் செய்தல், கடத்தல்கள் உள்ளிட்ட பல்வேறு செயற்பாடுகளுக்கு உதவியதாகத் தெரிவித்த ஜகத்ஜயசூரியவிற்கு எதிராக பிரேஸிலி;ல் வழக்குத் தொடரப்பட்டுள்ளது. எனினும், தாம் இந்தக் குற்றச் செயல்களில் ஈடுபடவில்லை என ஜகத் ஜயசூரிய தெரிவித்துள்ளார்.
ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேஸிலில் யுத்தக் குற்றச் செயல் வழக்கு
Aug 29, 2017 @ 14:42
முன்னாள் இராணுவத் தளபதி ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக பிரேஸிலில் யுத்தக் குற்றச் செயல் வழக்குத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஜகத் ஜயசூரிய தற்போது, பிரேஸிலுக்கான இலங்கைத் தூதுவராக கடமையாற்றி வருகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது. தென் அமெரிக்க மனித உரிமை குழுக்கள் இந்த வழக்கைத் தாக்கல் செய்துள்ளன.
மருத்துவ மனைகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், காணாமல் போதல்கள், சித்திரவதைகள் இடம்பெற்றதாகவும் இந்த சம்பவங்கள் குறித்து ஜகத் ஜயசூரிய எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் குற்றம் சுமத்தி வழக்கு தொடரப்பட்டுள்ளது.
பிரேஸிலில் ஜகத் ஜயசூரியவிற்கு ராஜதந்திர சிறப்புரிமை காணப்படுவதனால், வழக்குத் தொடர்ந்து சட்ட நடவடிக்கை எடுக்கப்பட முடியாது என தெரிவிக்கப்படுகிறது. கொலம்பியா, பேரு, ச்சிலி, ஆர்ஜன்டீனா மற்றும் சுரிநேம் ஆகிய நாடுகளினதும் தூதுவராக ஜகத் ஜயசூரிய கடமையாற்றுகின்றார்.
இந்த நாடுகளில் வழக்குத் தாக்கல் செய்து ஜகத் ஜயசூரியவிற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுப்பதற்கு முயற்சிக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது. சித்திரவதைகள் குற்றச் செயல்கள் தொடர்பில் தமக்கு எதுவும் தெரியாது என ஜகத் ஜயசூரிய கூற முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.