175
குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
முன்னாள் போராளி தொடர்பில் நான் எழுதிய கட்டுரை தொலைபேசி ஊடாக அடுத்த பேட்டியை வைத்து எழுதப்பட்டது. தொலைபேசியில் கதைத்தவர் போராளியா என்பது கூட எனக்கு தெரியாது என ம.அருளினியன் தெரிவித்துள்ளார்.
யாழில் நாளைய தினம் வெளியிடப்படவுள்ள கேரளா டயரீஸ் எனும் நூல் தொடர்பில் பல எதிர்ப்புக்குரல்கள் சமூக வலைத்தளங்களில் எழுந்துள்ள நிலையில் , குறித்த நூல் தொடர்பில் விளக்கம் கொடுக்கும் ஊடகவியலாளர் சந்திப்பு இன்றைய தினம் சனிக்கிழமை யாழ்.ஊடக அமையத்தில் நடைபெற்றது.
அதன் போது கடந்த 2012ஆம் ஆண்டு முன்னாள் பெண் போராளி தொடர்பில் ஆனந்த விகடனில் ம.அருளினியனால் எழுதப்பட்ட கட்டுரை தொடர்பில் ஊடகவியலாளர்கள் கேட்ட போதே அவ்வாறு பதிலளித்தார்.
அது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில் ,
கடந்த 2012ஆம் ஆண்டு ஆனந்த விகடன் பத்திரிகையில் மாணவ பத்திரிக்கையாளனாக பணியாற்றிக்கொண்டு இருந்தேன் அப்போது எனக்கு மாத சம்பளம் 500 ரூபாய் தான். அக்கால பகுதியில், ஆனந்த விகடன் பத்திரிக்கை பீடத்திற்கு , ஒரு பெண் தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தான் முன்னாள் பெண் போராளி பேசுவதாகவும் , சில விடயங்களை தெரிய படுத்த வேண்டும் எனவும் ஆசிரிய பீடத்திற்கு தெரிவித்தார்.
அப்போது அவர் பேசிய மொழி நடை ஆசிரிய பீடத்தில் உள்ளவர்களால் விளங்கி கொள்ள முடியவில்லை. அதனால் என்னை அவருடன் கதைக்குமாறும் , அவர் சொல்வதனை கேட்டு எழுதி தருமாறும் ஆசிரிய பீடத்தில் இருந்தவர்கள் கூறினார்கள்,
அதனை தொடர்ந்து நான் அவருடன் தொலைபேசியில் பேசி அவரின் பேட்டியை எடுத்தேன். அதனை அப்படியே எழுதி கொடுத்தேன். அதில் என்னுடைய வேலை அவர்கள் சொன்னதை செய்து கொடுத்தது தான். என்னுடன் கதைத்தவர் போராளியா என்பது கூட எனக்கு தெரியாது. அவர் பாலியல் தொழில் செய்தாரா என்பது கூட எனக்கு தெரியாது.
ஆனந்த விகடன் சொன்ன வேலையை செய்து கொடுத்தேன். ஏனெனில் எனக்கு ஆனந்த விகடன் மேல் பெரிய மரியாதை உண்டு. பெண் போராளிகள் தொடர்பில் எழுதிய கட்டுரைக்கு நான் மனவருந்துகிறேன். அதற்காக நான் பகிரங்கமாக மன்னிப்பு கேட்கிறேன். அக்கால பகுதியிலையே அதற்காக நான் மன்னிப்பு கேட்க விரும்பினேன். ஆனால் அதற்கு ஆனந்தவிகடன் அனுமதி அளிக்கவில்லை. தாம் அதற்கான விளக்கத்தை கொடுப்பதாக எனக்கு தெரிவித்தார்கள்.
நான் அந்நேரம் ஆனந்த விகடனில் பணியாற்றிக்கொண்டு இருந்ததால் , நிறுவனத்தின் சில ஒழுங்கு விதிகளுக்கு கட்டுப்பட வேண்டிய தேவை இருந்ததால் , நான் அதற்கு கட்டுப்பட்டேன். என தெரிவித்தார்.
அதேவேளை தான் வெளியிட உள்ள கேரளா டயரீஸ் எனும் நூல் தொடர்பில் கருத்து தெரிவிக்கும் போது , நான் யாழ்ப்பணத்தில் இருந்து கேரளாவுக்கு பயணம் செய்திருந்தேன். கேரளாவுக்கும் யாழ்ப்பாணத்திற்கும் தொடர்பு இருக்கு என்பது தொடர்பில் நாலு கட்டுரைகள் உண்டு ஏனையவை கேரளா பற்றியும் கேரளாவின் தனித்துவம் பற்றியும் எழுதி உள்ளேன் அதில் 24கட்டுரைகள் உள்ளன அதுவே எனது கேரளா டயரீஸ் புத்தகத்தில் உள்ளது. என தெரிவித்தார்.
Spread the love