ரஜினியும், தானும் அரசியலில் நல்ல உதாரணங்களாக இருக்கப் போவதாகவும், எதிர்த்து அரசியல் செய்தாலும் எதிரிகளாக இருக்கப் போவதில்லை எனவும், நடிகர் கமல் தெரிவித்துள்ளார். கமல் நேற்று டெல்லி முதல்வர் அரவிந்த் கேஜ்ரிவாலை ஆழ்வார்பேட்டையிலுள்ள தனது இல்லத்தில் சந்தித்தார். இதன்பின் இரவு சில ஆங்கில தொலைக்காட்சி சேவைகள், அவரை செவ்வி கண்டன.. இதன்போது சில அரசியல் திட்டங்களை கமல் மனம்விட்டு வெளிப்படுத்தியுள்ளார்
அதிமுகவில் நடைபெறும் தகராறுகளையும், சட்டசபை தேர்தலுக்கான சாத்தியக் கூறுகள் குறித்தும் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதிலளத்த கமல், இது ஒரு கட்டாய திருமணம். இந்த கட்டாய திருமணத்தில் மணமகள், தமிழக மக்கள்தான். இந்த திருமணத்திலிருந்து வெளியேற மக்கள் விரும்புகிறார்கள். இன்னும் 100 நாட்களில் தேர்தல் நடைபெறுமானால், தான் களத்தில் நிற்கப் போவதாகவும் தெரிவித்துள்ளார்.
ரஜினியின் அரசியல் ஈடுபாடு குறித்த கேள்விக்கு கமல் பதிலளிக்கையில், தான், நாலைந்து வாரங்களுக்கு முன்பாக, ரஜினியை சந்தித்ததாகவும், தாங்கள்ங்கள் இருவருமே இணைந்து பணி புரிந்துள்ளதாகவும் கூறிய அவர், தனக்கு நிறைய விஷயங்கள் பேச இருந்ததாக தெரிவித்துள்ளார்.
முதலில் ஊழலை ஒழிக்க வேண்டும் என்பதுதான் ரஜினிக்கும், தனக்கும் உள்ள ஒரே மாதிரியான குறிக்கோள் எனக் கூறிய அவர், ஆனால் தான் வேறு வழியில் அதை செய்யவுள்ளதாகவும், ரஜினி வேறு வழியில் போகிறார் எனவும் தெரிவித்துள்ளார். எனினும் எங்கள் சந்திப்பின்போது அதுகுறித்து விரிவாக பேசவில்லை. எனவே இருவருக்கும் எந்த கருத்துவேறுபாடும் எழவில்லை எனக் கூறிய கமல், ரஜினியை கட்டியணைத்தபடியே “நான் உள்ளே (அரசியலுக்குள்) போகிறேன்”. எனத் தெரிவித்துள்ளார்.
இதேவேளை “நாங்கள் இருவருமே உதாரணத்தை ஏற்படுத்துவோராக இருக்க விரும்புகிறோம். நாங்கள் சினிமா துறையில் போட்டியாளர்களாக இருந்தோம். ஆனால், அரசியலில் நாங்கள் நல்ல உதாரணங்களை ஏற்படுத்த விரும்புகிறோம். நான் ரஜினி மீது சேற்றை வாரி இறைப்பதை செய்யப்போவதில்லை, அவரும் அப்படித்தான். எனத் தெரிவித்த கமல், தாம் அரசியலுக்கு வருவது உறுதி என்றும் தமிழக மக்களுக்காக முதல்வராக விரும்புவதாகவும் கூறியுள்ளார்
“அரசியலுக்குள் நுழைவது என்பது முள் கிரீடத்தை தலையில் சுமப்பதற்கு சமமானது. மக்களைப் பொருத்தவரை அவர்களின் பிரச்னைகளை யாரும் கண்டு கொள்வதில்லை என்றே நினைக்கின்றனர். இடது சாரியா, வலது சாரியா அல்லது வேறு சிந்தனையுடையவனா என்பதையெல்லாம் மக்கள் பார்க்கவில்லை. என்னைப் பொருத்தவரை கருப்பு தான் என்னுடைய நிறம். அதில் தான் காவி உட்பட அனைத்து நிறங்களும் உள்ளன. அரசியல் ஒரு புதைகுழி என்பதை மாற்றி அனைவருக்குமானதாக மாற்ற வேண்டும் என்பதே இப்போதைய தேவையாக உள்ளது. அரசியல்வாதி ஆவதற்கு முன்னர் என்னை நான் தயார்படுத்திக் கொள்ள வேண்டும். இதற்காக மக்களை நேரில் சந்திக்க உள்ளேன், என்னுடைய மக்கள் சந்திப்பு பயணத்தை விரைவில் அறிவிப்பேன். உடனடியாக எந்த மாற்றத்தையும் செய்து விடுவேன் என்று நான் உறுதியளிக்கவில்லை. ஆனால் மாற்றத்திற்காக நான் தலைவணங்கத் தயாராக இருக்கிறேன் என்பதையே சொல்கிறேன் என்று கூறியுள்ளார். மக்களின் ஒத்துழைப்பு இன்றி எதையுமே செய்ய முடியாது, ஏன் நான் அவர்களுக்காக உதவ நினைப்பதில் பாதியைக் கூட நிறைவேற்ற முடியாது. என்னைப் பொறுத்தவரையில் நான் பகுத்தறிவாளன். கடவுள் இருக்கிறாரோ இல்லையோ இது எல்லாவற்றையும் விட நான் மக்களின் அன்பை மதிக்கிறேன். நான் மக்களுக்கு உதவுவதற்காக எந்த அளவிற்கு வேண்டுமானாலும் கீழே இறங்கிச் செல்லத் தயாராக இருக்கிறேன். நான் மக்களுக்காக உதவும் ஒரு கருவி அதைத் தவிர வேறு ஒன்றும் சொல்வதற்கில்லை.” இவ்வாறு கமல்ஹாசன் கூறியுள்ளார்.