குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
மத்திய வங்கியின் ஆளுனர் பதவியை ஏற்றுக்கொள்ளுமாறு பிரதமர் ரணில் விக்ரமசிங்கவே தம்மிடம் கோரியிருந்தார் என மத்திய வங்கியின் முன்னாள் ஆளுனர் அர்ஜூன் மகேந்திரன் தெரிவித்துள்ளார். மத்திய வங்கி பிணை முறி மோசடிகள் குறித்த ஜனாதிபதி ஆணைக்குழு விசாரணைகளில் பங்கேற்ற போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 8ம் திகதி மாலை வேளையில் தம்மிடம் இந்தக் கோரிக்கையை பிரதமர் முன்வைத்திருந்தார் என அவர் தெரிவித்துள்ளார். தொலைபேசி ஊடாக தொடர்பு கொண்டு தம்மை இலங்கையின் மத்திய வங்கி ஆளுனர் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு கோரியதாகத் தெரிவித்துள்ளார்.
கடந்த 2015ம் ஆண்டு ஜனவரி மாதம் 23ம் திகதி நியமனக் கடிதம் கிடைக்கப் பெற்றதாகவும், 26ம் திகதி கடமைகளை பொறுப்பேற்றுக் கொண்டதாகவும் அர்ஜூன் மகேந்திரன் ஆணைக்குழு முன்னிலையில் தெரிவித்துள்ளார். ரணில் விக்ரமசிங்கவிற்கும் தமக்கும் நீண்ட நாள் நட்புறவு காணப்படுவதாகவும், வங்கித்துறையில் நீண்ட அனுபவம் கொண்ட காரணத்தினால் இந்தப் பதவியை ஏற்றுக் கொள்ளுமாறு பிரதமர் கோரியிருக்கலாம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இலங்கையின் மத்திய வங்கி ஆளுனர் பதவியை ஏற்றுக் கொள்ள முன்னதாக டுபாயில் தாம் கடமையாற்றியதாகத் தெரிவித்துள்ளார்.