தமிழகத்தில் வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு அருகில் வசிக்கும் மக்கள் 15 ஆண்டுகளுக்கு பின்னர் பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடியுள்ளனர். ஈரோடு மாவட்டத்தின் பெருந்துறை பகுதியிலுள்ள வெள்ளோடு பறவைகள் சரணாலயத்திற்கு ஆண்டுதோறும் செப்டம்பர் மாதம் முதல் பிப்ரவரி மாதம் வரை பறவைகள் வந்து செல்லுகின்றன.
உள்நாட்டு பறவைகளுடன் சைபீரியா, நியூசிலாந்து, ரஷியா, அவுஸ்திரேலியா போன்ற பல்வேறு நாடுகளின் பறவைகளும் வருகின்றன. இச் சரணாலயத்தில் உள்ள ஏரியில் உள்ள மீன்களே இங்கு வரும் பறவையினங்களுக்கு உணவாகும்.
தற்போது ஏற்பட்ட வறட்சி காரணமாக ஏரி வறண்டுகாணப்படுவதால் பறவைகள் வருகை நின்றுபோயுள்ளது. 15 ஆண்டுகளாக பறவைகளுக்கு இடையூறு ஏற்படாமல் இருப்பதற்காக பட்டாசுகளை வெடிக்காத அப்பகுதி மக்கள், இந்த ஆண்டு பட்டாசுகளை வெடித்து தீபாவளியை கொண்டாடியுள்ளனர்.