தமிழகத்தின் தலைநகரம் சென்னையில் அடுத்த 24 மணி நேரத்துக்கு கனமழை நீடிக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது. தமிழகத நாகை மாவட்டம் ஆணைக்காடுசத்திரம் பகுதியில் அதிக மழை வீழ்ச்சி கிடைக்கும் என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.
தென்மேற்கு வங்கக்கடலில் மையம் கொண்டிருந்த வளிமண்டல மேலடுக்கு சுழற்சி அதே இடத்தில் நிலை கொண்டுள்ளதாகவும் இதனால், அடுத்த 24 மணி நேரத்துக்கு தமிழகத்தில் கனமழை தொடரும் என்றும் கடலோர மாவட்டங்களில் அனைத்து பகுதிகளிலும் மழை பெய்யும் என்றும் அவர் கூறியுள்ளார்.
இதேவேளை சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், நாகை, கடலூர், திருவாரூர் ஆகிய மாவட்டங்களிலும் கனமழையும் உள்மாவட்டங்களில் பரவலாக பல இடங்களில் மிதமான மழையும் பெய்யும் என்றும் குறிப்பிட்டார்.
இன்று காலை 8.30 மணியளவில் எடுக்கப்பட்ட கணக்கின்படி அதிகபட்சமாக நாகை மாவட்டம் ஆணைக்காடுசத்திரம் பகுதியில் 9 செ.மீ. மழை பதிவாகியுள்ளது. சீர்காழியில் 6 செ.மீ., சென்னை தாம்பரத்தில் 3 செ.மீ. அளவும் மழை பெய்துள்ளது என்றும் சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குநர் எஸ்.பாலச்சந்திரன் மேலும் தெரிவித்துள்ளார்.