அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் வேகமாகப் பரவிய காட்டுத் தீ , நகருக்குள் புகுந்ததால் சேர்ந்த ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறியுள்ளனர்.
லொஸ் ஏஞ்சல்ஸின் வடக்கில் உள்ள வென்சுரா மற்றும் சான்டா பவுலா ஆகிய நகரங்களில் 8,000 வீடுகளில் வசித்தவர்கள் கட்டாயம் வெளியேறவேண்டும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். தீ வெகு வேகமாகப் பரவி வருவதாகவும் தங்களால் அதைக் கட்டுப்படுத்த முடியவில்லை எனவும் தீயணைப்புத் துறையினர் தெரிவித்தனர்.
நேற்று மாலை ஆரம்பமான காட்டுத் தீ இன்று காலையில் 26,000 ஏக்கர் பரப்பை அழித்து விட்டதெனவும் தீயில் இருந்து தப்பிச் சென்றபோது வீதிவிபத்தில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வென்சுரா நகருக்குள் தீ பரவியதால் பெரிய அடுக்குமாடிக் குடியிருப்பு உள்ளிட்ட பல கட்டடங்கள் எரிந்துள்ளதாகவும் 2,60,000 பேருக்கான மின்சாரம் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.