ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடனான பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்தமைக்கு பசில் ராஜபக்ஸவும் நாமல் ராஜபக்சவும் பிரசன்ன ரணதுங்கவுமே காரணம் என கடுமையான விமர்சனங்கள் எழுந்துள்ளதாக கொழும்பில் தகவல்கள் வெளியாகி உள்ளன.
குறிப்பாக எதிர்வரும் உள்ளுராட்சி தேர்தலின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியுடன் இணைந்து போட்டியிடுவதற்காக மேற்கொள்ளப்பட்ட முயற்சிகள் தோல்வியடைந்துள்ளமை குறித்து மகிந்த சார்பு பொது எதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் விரக்தியில் இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
பேச்சுவார்த்தைகள் தோல்வியில் முடிவடைந்துள்ளமை பொது எதிரணியின் தலைவர்கள் மத்தியில் குழப்பங்களை ஏற்படுத்தியுள்ளதுடன் சிலர் பொது எதிரணியிலிருந்து வெளியேறப்போவதாக எச்சரிக்கை விடுத்துள்ளதுடன் அண்மையில் மகிந்த ராஜபக்ச கலந்துகொண்ட பதுளை பொதுக்கூட்டத்தை அவர்கள் புறக்கணித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை நேற்றையதினம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெற்ற ஐக்கிய மக்கள் சுதந்திரக்கூட்டமைப்பின் நிறைவேற்று குழு கூட்டத்தி;ல் பொதுஎதிரணியின் நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன கலந்துகொண்டதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்தக் கூட்டத்தில் ஐக்கிய மக்கள் சுதந்திரகூட்டமைப்பில் அங்கம் வகிக்கும் கட்சிகள் தேர்தலில் தனித்து போட்டியிட விரும்பினால் அதற்கு ஆதரவளிக்கவேண்டும் என கோரிக்கை முன்வைத்ததாகவும்,, அந்தக் கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டதால் தனது கட்சி பொது எதிரணியுடன் இணைந்து போட்டியிடவுள்ளதாகவும், இந்த சந்திப்பில் கலந்துகொண்ட நாடாளுமன்ற உறுப்பினர் தினேஸ் குணவர்த்தன தெரிவித்துள்ளார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது