ஈ.பி.ஆர்.எல்.எப் கட்சியும் அதன் தலைமையும் ஏமாற்றப்பட்டு உள்ளதாக, தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் தலைவர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைமையை எதிர்க்கிறோம் என்பதற்காக, தமிழர் விடுதலைக் கூட்டணியுடன், கைக்கோர்க்க முடியாது என யாழ்ப்பாணத்தில் நேற்று (07.12.17)) நடத்தப்பட்ட ஊடகவியலாளார் சந்திப்பில் தெரிவித்துள்ளார்.
“தற்போதைய நிலையில், நிலையானதும், உறுதியானதுமான ஒரு மாற்றுத் தலைமையின் அவசியம் ஏற்பட்டுள்ளது. என்றபோதிலும் மாற்றுத் தலைமைக்கு தமிழர் விடுதலைக் கூட்டணி ஒரு பொருத்தமான கட்சியல்ல. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பேருக்கு மட்டும்தான் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பாக இருக்கின்றதே தவிர அது தமிழரசுக் கட்சியாகத்தான் செயற்படுகிறது என்றும், கூட்டமைப்பு ஏனைய கட்சிகளை புறக்கணிப்பதாகவும், முக்கியத்துவம் கொடுப்பதில்லை என்றும் கூறி, தமிழரசுக் கட்சியின் சின்னத்திலோ பெயரிலோ போட்டியிடமுடியாது எனக் கூறி சுரேஸ் பிரேமச்சந்திரனும், அவரது கட்சியினரும் வெளியேறி உள்ளனர்.
“எங்களைப் பொறுத்தவரை கொள்ளை ரீதியாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பிழை விடுகின்றது என்பதை நாம் ஏற்றுக் கொள்கிறோம்.அதற்காக சுரேஸ் பிரரேமச்சந்திரன் தமிழர் விடுதலைக் கூட்டணியுடன் இணைந்திருக்க கூடாது. இந்த தமிழர் விடுதலைக் கூட்டணியனாது. கூட்டமைப்பினைப் விடவும் மோசமான கொள்கைகளைக் கொண்டதாகும். EPRLF கட்சியின் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் மீது நாங்கள் மதிப்பு வைத்திருக்கின்றோம். அத்தகைய மதிப்பு இல்லாவிட்டால் அவர்களுடன் கூட்டுச் சேருவதற்கு இணங்கியிருக்கமாட்டோம். நாங்கள் ஈ.பி.ஆர்.எல்.எப்பின் சின்னத்தில் போட்டியிடவும் தயாராக இருந்தோம். எனினும் நிலைமை மாறிவிட்டது, துரதிஸ்டவசமாக தமிழ் விரோதிகளினால் சுரேஷ் பிரேமச்சந்திரன் எமாற்றப்பட்டு விடுதலைக் கூட்டணியில் இணைக்கப்பட்டுள்ளார்” என ஊடகவியலாளர் சந்திப்பில் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.