சகல சமய கோட்பாடுகளும் வழிகாட்டும் நல்லிணக்கம் மற்றும் சகவாழ்வு பற்றிய செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதற்கு தலைமை வகிக்குமாறு ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன சர்வ மத தலைவர்களிடம் கோரிக்கை விடுத்தார். இன்று (12) பிற்பகல் கொழும்பு, பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இடம்பெற்ற சர்வ மத மாநாட்டில் உரையாற்றும் போதே ஜனாதிபதி இந்த கோரிக்கையை முன்வைத்தார்.
நாட்டைப் பிரிப்பதற்காக போராடிய தீவிரவாதிகள் யுத்தத்தின் மூலமாக தோற்கடிக்கப்பட்டுள்ள போதிலும் அவர்களால் தோற்றுவிக்கப்பட்ட எண்ணங்கள் முற்றாக தோற்கடிக்கப்படவில்லை எனவும் மாற்று எண்ணக்கருக்களினூடாகவே அவற்றை இல்லாது செய்யலாம் எனவும் ஜனாதிபதி தெரிவித்தார்.
தவறான பாதையில் பயணிக்கும் சமூகத்தை நல்வழிப்படுத்துவதற்கு சமயப் போதனைகளும், கோட்பாடுகளுமே ஏதுவாக அமைகின்றன எனவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். நாட்டில் மீண்டும் யுத்தமொன்று ஏற்படாத வகையில் நாட்டில் நல்லிணக்கத்தையும் சகவாழ்வையும் கட்டியெழுப்புவதற்கு அரசாங்கத்தினால் மேற்கொள்ளப்படும் செயற்திட்டங்களை வெற்றிகரமாக நடைமுறைப்படுத்துவதற்கு ஒன்றிணைவது அனைவரினதும் பொறுப்பாகும் என்றும் ஜனாதிபதி தெரிவித்தார்.