மத்திக்கு முன் மண்டியிட்டிருந்தால் மகத்தான உயர்ச்சியை பெற்றிருக்கலாம். ஆனால், சுயமரியாதையை இழந்து மாகாணத்தை தெற்கிற்கு அடகு வைத்திருப்போம் என வடமாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ். ஊடக அமையத்தின் ஐந்தாவது ஆண்டு நிறைவை முன்னிட்டு, ஊடக அமையத்திற்கு முதலமைச்சர் விக்னேஸ்வரன் இன்று (17.12.17) விஜயம் செய்திருந்தார். இதன்போது ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த அவர், அதிகாரப் பகிர்வு குறித்து பேசும் மத்திய அரசு அதிகாரங்களை பகிர முன்வராத நிலையே நீடிப்பதாக கவும், இந்த நிலமை மாற்றமடைய வேண்டுமாயின் உடனடி அரசியல் யாப்பு மாற்றம் ஒன்றே தற்போது அவசியம் எனவும் தெரிவித்துள்ளார்.
குறிப்பாக வட மாகாணத்தின் நிர்வாக கட்டமைப்பு உள்ளிட்ட பல விடயங்களில் மத்திய அரசின் தலையீடு காணப்படுவதோடு, அதற்கு வடக்கில் பணியாற்றும் பல அலுவலர்களும் உடந்தையென சி.வி.விக்னேஸ்வரன் குற்றஞ்சாட்டியுள்ளார். வடக்கு மாகாண சபையில் தாம் செய்வதற்கு முன்வந்த விடயங்களை செயற்படுத்த விடாமல் தடுத்தமையே இதுவரை தான் பெற்றுக்கொண்ட அனுபவம் எனக் குறிப்பிட்ட முதல்வர், கடந்த காலத்தில் அரசியல்வாதிகளின் அடிவருடிகளாக சில அலுவலர்கள் செயற்பட்டமையும் இதற்கு காரணமென குறிப்பிட்டுள்ளார்.
மத்திய அரசின் தலையீடுகளுக்கு உதாரணமாக, கடந்த 17 வருடங்களாக வடக்கில் சேவையாற்றிய ஒருவரை இடமாற்றம் செய்ய பொதுச் சேவைகள் ஆணைக்குழு கட்டளை பிறப்பித்துள்ள போதும், ஆளுநரின் அனுசரணையில் அந்த இடமாற்றம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதென முதல்வர் சுட்டிக்காட்டியுள்ளார். இந்த நிலையில் மாணாக சபை ஆட்சி முறையின் மீது காணப்படும் மத்திய அரசின் இவ்வாறான செல்வாக்கு, வடக்கு மாகாணத்தின் நிர்வாக கட்டமைப்பை சீர்குலைப்பதாகவே அமையுமென சி.வி.விக்னேஸ்வரன் தெளிவுபடுத்தி உள்ளார்.