பாரிஸ்:
பிரான்ஸ் நாட்டில் பாரிஸ் அருகே பிரெஞ்சு மன்னன் 14-ம் லூயி கட்டிய வெசலர்ஸ் அரண்மனை உள்ளது. இந்த அரண்மனை அருகே பழங்கால கட்டிடங்கள் இருந்த இடத்தை பிரான்சு நாட்டின் கட்டுமான நிறுவனமான எமாட் கசோக்கி விலைக்கு வாங்கியது. பின்னர் அங்குள்ள கட்டிடங்களை இடித்து பிரமாண்ட பங்காள வீடு ஒன்றை கட்டி வந்தது.
முழுக்க முழுக்க 17-ம் நூற்றாண்டு பழங்கால அரண்மனை போன்ற தோற்றத்தில் உள் அறைகள் அமைக்கப்பட்டு, இந்த கட்டிடம் கட்டப்பட்டு வந்தது. 2008-ம் ஆண்டு கட்டுமானம் தொடங்கி 2011-ம் ஆண்டு முடிவடைந்தது. இதற்கு ‘சாட்டியூ லூயிஸ் 14’ என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த வீடு 57 ஏக்கர் பரப்பளவுள்ள பிரமாண்ட வளாகத்தில் அமைந்துள்ளது. வீடு மட்டும் 75 ஆயிரத்து 350 சதுர அடி பரப்பில் கட்டப்பட்டுள்ளது.
வீட்டு முற்றத்தில் தங்க தகடுகளால் வடிவமைக்கப்பட்ட செயற்கை நிரூற்று அமைக்கப்பட்டுள்ளது. மேலும், அதிநவீன அலங்கார விளக்குகள், முழுமையான குளிரூட்டல் வசதி, சினிமா திரையரங்கு, பல்வேறு நீச்சல் குளங்கள், அகழி என அனைத்து வசதிகளுடன் இந்த வீடு கட்டப்பட்டிருந்தது.
இந்த வீடு 2015-ம் ஆண்டு வீடு விற்பனை செய்யப்பட்டது. ரூ.2 ஆயிரம் கோடிக்கு வீடு விலை போனது. உலகிலேயே இந்த வீடே அதிக விலை கொண்டதாகும் என கணிப்பிடப்பட்டுள்ளது.
ஆனால் இந்த வீட்டை வாங்கியவர் யார் என்பது தெரியாமல் ரகசியம் பாதுகாக்கப்பட்டு வந்தது. இப்போது இந்த வீட்டை வாங்கியவர் சவுதி அரேபியா பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான் என்பது தெரியவந்துள்ளது.
இவருக்கு பிரான்ஸ் நாட்டிலும், லக்சம்பர்க் நாட்டிலும் பல நிறுவனங்கள் உள்ளன. அந்த நிறுவனங்களில் 8 நிறுவனங்கள் சேர்ந்து இந்த வீட்டை வாங்கியுள்ளன.
கடந்த 2015-ம் ஆண்டு முகமது பின் சல்மான் ரஷிய தொழிலதிபருக்கு சொந்தமான 440 அடி நீளம் கொண்ட சொகுசு உல்லாச படகு ஒன்றை வாங்கினார். இந்த படகின் விலை மட்டும் 3 ஆயிரம் கோடி ரூபாய் ஆகும். சமீபத்தில் பாரீஸ் அருகே கோண்டேசர்வெர்ஜிர் நகரில் 620 ஏக்கர் எஸ்டேட் ஒன்றை வாங்கினார். பிரபல ஓவியர் லியானர்டோ டாவின்சி வரைந்த ஓவியம் ஒன்றை அண்மையில் 2 ஆயிரத்து 800 கோடி ரூபாய்க்கு வாங்கினார். இப்படி ஆடம்பரமான பொருட்களை வாங்கி குவிக்கும் இளவரசர் இப்போது இந்த வீட்டை வாங்கியுள்ளார்.
முகமது பின் சல்மான் பல்வேறு ஊழல்களில் ஈடுபட்டிருப்பதாக ஏற்கனவே குற்றம்சாட்டப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அவர் இந்த வீட்டையும் வாங்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.