கேள்வி கேட்டு புரட்சி செய்த காலம் முடிந்துவிட்டது. இனி பதில் சொல்லி புரட்சி செய்ய வேண்டிய காலம் வரும் என வேலைக்காரன் படம் குறித்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் இயக்குநர் மோகன் ராஜா தெரிவித்துள்ளார். சிவகார்த்திகேயன், நயன்தாரா, பகத் பாசில் நடிப்பில் மோகன்ராஜா இயக்கத்தில் 24ஏஎம் ஸ்டுடியோஸ் தயாரிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகியிருக்கும் வேலைக்காரன் படத்துக்கு அனிருத் இசையமைத்திருக்கின்றார்.
நாளை வெள்ளிக்கிழமை இந்தப்படம் வெளியாகவுள்ள நிலையில் இன்று பத்திரிக்கையாளர்களை சந்தித்து வேலைக்காரன் படம் பற்றிய தனது கருத்துக்களை இயக்குனர் மோகன் ராஜா பகிர்ந்து கொண்டுள்ளார். சிவகார்த்திகேயன் இல்லைனா இந்த படமே வந்திருக்காது எனத் தெரிவித்த அவர் படத்துக்கு என்ன தேவையோ அதை தயங்காமல் பண்ணுங்கனு ஆர்டி ராஜா பெரிய நம்பிக்கையை கொடுத்தார் எனவும் தெரிவித்துள்ளார்.
வேலைக்காரன் படத்தில் ஒரு பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருக்கிறது எனவும் எல்லோருக்கும் நல்ல கதாபாத்திரத்தை கொடுத்திருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார். மேலும் ராம்ஜி உழைப்பு அபரிமிதமானது எனவும் அவருடன் 3-வது படமும் இணைந்து பண்ணுவேன் எனவும் தெரிவித்துள்ளர். அத்துடன் அனிருத் சின்ன பையன் என்றாலும் ஆனால் பெரிய திறமையாளர் எனவும் கதையை புரிஞ்சிக்கிட்டு சிறப்பான இசையை கொடுத்திருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார்.
நயன்தாரா தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய வரம் எனவும் அவர் ஒரு படத்தில் இருந்தாலே அது மிகவும் சென்சிட்டிவான படமாக தான் இருக்கும் எனவும் அந்த அளவுக்கு பக்குவமான நடிகையாகி இருக்கிறார் எனவும் தெரிவித்துள்ளார். ஃபகத் பாசில், அரவிந்த்சாமி போன்ற மிகச்சிறந்த நடிகர்களை என் படங்களில் இயக்கியதில் தான் பெருமைப்படுகிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
1989-ல் ஒரு தொட்டில் சபதம் படத்தில் இருந்து சினிமாவில் இருந்து வரும் தான் பலரிடம் ஆலொசனை பெற்றே படங்களை இயக்குவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார். 20 வருடங்களாக தன் மனதுக்குள் இருந்த சமூகத்தில் கேட்க நினைத்த கேள்விகளை தனது திரைப்படம் மூலம் கேட்டிருக்கின்றேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்தவனைகயில் தனது தனி ஒருவன் படம் ஒரு அடையாளத்தை கொடுத்தது எனவும் வேலைக்காரன் படத்தில் மக்கள் கேட்க நினைத்த கேள்விகளையும் சேர்த்து கேட்டிருக்கிறேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.