குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
யாழ்.மாவட்டத்தில் 16 உள்ளூராட்சி சபைகளிலும் போட்டியிடுவதற்காக 125 வேட்பு மனுக்கள் கிடைக்க பெற்றதாகவும் அவற்றில் 05 வேட்பு மனுக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு உள்ளதாகவும் யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகர் நா.வேதநாயகன் தெரிவித்துள்ளார்.
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலில் போட்டியிடுவதற்கான வேட்புமனுக்களை தாக்கல் செய்வதற்கான கால எல்லை இன்று வியாழக்கிழமை மதியம் 12 மணியுடன் நிறைவடைந்தது. அதன் இன்று மாலை 06 மணியளவில் ஊடகவியலாளர்களை சந்தித்த போதே அவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவிக்கையில்
நடைபெறவுள்ள உள்ளூராட்சி தேர்தலுக்காக யாழ்.மாவட்டத்தில் 16 உள்ளூராட்சியில் போட்டியிடுவதற்காக 127 பேர் கட்டுப்பணம் செலுத்தி இருந்தனர். இன்றைய தினம் மதியம் 12 மணியுடன் வேட்பு மனு கையளிக்கும் கால எல்லை முடிவடைந்த நிலையில் அதுவரையில் 125 வேட்பு மனு பத்திரங்களே யாழ்.மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலகரிடம் கையளிக்கப்பட்டது. இரண்டு வேட்பு மனுக்கள் உரிய கால பகுதிக்குள் கையளிக்கப்படவில்லை.
கையளிக்கப்பட்ட 125 வேட்பு மனுக்களில் 120 வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன.05 வேட்பு மனுக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டன. நெடுந்தீவு பிரதேச சபை , வலி.வடக்கு பிரதேச சபை , வலி.கிழக்கு பிரதேச சபை , யாழ்.மாநகர சபை ஆகிய சபைகளில் ஸ்ரீலங்கா பொது ஜன முன்னணியினர் தாக்கல் செய்த வேட்பு மனுக்கள் முற்றாக நிராகரிக்கப்பட்டு உள்ளன. அத்துடன் வலி.மேற்கில் வேட்பு மனு தாக்கல் செய்யத சுயேட்சை குழு ஒன்றினதும் வேட்பு மனு நிராகரிக்கப்பட்டுள்ளது