இயக்குநர் தங்கர் பச்சானின் இயக்கத்தில், பரத்வாஜின் இசையில்,பிரபுதேவா மற்றும் பூமிகாவின் நடிப்பில் ‘களவாடிய பொழுதுகள்’ திரைப்படம், வெள்ளிக்கிழமையன்று (டிசம்பர் 29) வெளிவரவுள்ளது.
நீண்ட தாமதத்துக்கு பிறகு வெளிவந்தாலும், களவாடிய பொழுதுகள் திரைப்படம் அதிக அளவில் எதிர்பார்ப்பை உருவாக்கியுள்ளது. இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பு மற்றும் தாமதம் குறித்து பிபிசி தமிழிடம் இயக்குநர் தங்கர் பச்சான் உரையாடினார். ”எனது படைப்புகள், எழுத்து மற்றும் பேச்சு ஆகியவற்றை தொடர்ந்து கவனித்து வருபவர்கள் என் மீது வைத்த நம்பிக்கைதான் இந்த படத்தின் மீதுள்ள எதிர்பார்ப்பு” என்று தங்கர் பச்சான் கூறினார்.
தாமதத்துக்கு காரணம் என்ன?
2012-ஆம் ஆண்டு சென்சார் செய்யப்பட்டு தயாரான களவாடிய பொழுதுகள் திரைப்படம் 2017-ஆண்டு இறுதியில் வெளிவருகிறது. இந்த தாமதம் குறித்து பேசிய அவர், ”திரைப்படத்தை பொழுது போக்காக மட்டும் பார்க்கும் தன்மை தமிழர்களிடம் உள்ளது. ஆனால், என்னை போன்றவர்கள் பொழுதுபோக்கோடு சேர்த்து ,மண், இனம், மொழி சார்ந்து எந்த பிரசாரமும் இன்றி அழகியலோடு திரைப்படம் செய்ய முனைகிறோம்” என்று கூறினார்.
”இந்த திரைப்படத்தை தயாரித்த ஐங்கரன் நிறுவனம், பல பெரிய பட்ஜெட் திரைப்படங்களை தயாரித்து வந்தார்கள். அதனால், அவர்களால் இந்த படம் போல தாங்கள் தயாரித்த சில திரைப்படங்களில் அதிகம் கவனம் செலுத்த முடியவில்லை.. மேலும் நடிகர்களின் முகத்தை வைத்து மட்டும் படம் பார்க்கும் மக்களின் மனோபாவம் மாற வேண்டும்” என்று அவர் மேலும் தெரிவித்தார்.
தனது திரைப்பட பாணி குறித்து பேசிய தங்கர் பச்சான், ”ஒரு திரைப்படம் என்றில்லை, எந்த படைப்பாக இருந்தாலும் ஒரு தாக்கத்தை உருவாக்க வேண்டும்.. இரண்டு, மூன்று நாட்களாவது ஒரு அலைக்கழிப்பை உருவாக்க வேண்டும் உலகின் சிறந்த படைப்புகள் அதைத்தான் செய்கிறது. நானும் அவ்வாறான திரைப்படங்களையே திட்டமிட்டு உருவாக்குகிறேன்” என்று குறிப்பிட்டார்.
பேசப்படுவார் ‘பொற்செழியன்’
களவாடிய பொழுதுகள் திரைப்படத்தில் நடித்த பிரபுதேவா மற்றும் பூமிகா குறித்து குறிப்பிட்ட தங்கர் பச்சான், ”பிரபுதேவா இந்திய சினிமாவின் ஓர் அடையாளம் என்று கூறலாம், ஆனால், அவரை ஒரு பொழுதுபோக்கு கலைஞராகவே பலரும் பார்க்கின்றனர்” என்றார்.
”இந்த படத்தில் நான் அவரை பயன்படுத்திய விதம் குறித்து பிரபுதேவா என்னிடம் மகிழ்ச்சி தெரிவித்தார். பிரபுதேவா ஏற்று நடித்துள்ள பொற்செழியன் கதாப்பாத்திரம், அழகி திரைப்படத்தின் தனலட்சுமி கதாப்பாத்திரம் போல் பேசப்படும்” என்று தங்கர் பச்சான் நம்பிக்கை தெரிவித்தார்.
‘நடிப்பில் கவர்வார் பூமிகா’
ஜெயந்தி கதாபாத்திரத்தில் நடித்துள்ள பூமிகா சிறப்பாக நடித்துள்ளதாக குறிப்பிட்ட அவர், ” அவரின் நடிப்பு மக்களை கட்டிப்போடும் விதமாக இருக்கும், பிரபு தேவா, பூமிகா மற்றும் பிரகாஷ் ராஜ் ஆகிய மூன்று கதாபாத்திரங்களுக்கு இடையேயான உணர்ச்சிகரமான போராட்டம்தான் இந்தக் கதை” என்றார்.
இந்த திரைப்படத்தில் பெரியார் கதாபாத்திரத்தில் சத்யராஜ் நடித்துள்ளார். கோவை மற்றும் சென்னை என இரு தளங்களில் பயணிக்கும் இப்படம், வெவ்வேறு காலகட்டங்களில் பயணிக்கிறது.
‘ஏராளமான அவமானங்களை சந்தித்துள்ளேன்’
தற்போது பெரியாரும், ஜீவாவும் இருந்திருந்தால், அனைத்து விதமான சீரழிவுகளையும் தாங்கிக்கொள்ள தயாராகிவிட்ட மக்களை, என்ன கேள்வி கேட்டிருப்பார்கள் என்பதை தனது கற்பனையை பயன்படுத்தி காட்சிப்படுத்தியிருப்பதாக தங்கர் பச்சான் தெரிவித்தார்.
50 திரைப்படங்களில் உழைத்த உழைப்பை களவாடிய பொழுதுகள் திரைப்படத்தில் செலவழித்துள்ளதாக தெரிவித்த தங்கர் பச்சான், ”இந்த படம் தொடர்பாக ஏராளமான அவமானங்களையும் , சோதனைகளையும் நான் சந்தித்துள்ளேன், சந்திக்கக்கூடாத மனிதர்களை சந்தித்துள்ளேன். படம் வெளிவந்தவுடன் இது குறித்து நான் தெரியப்படுத்துவேன்” என்று தெரிவித்தார்.
படத்தில் பாடல்களின் பங்கு என்ன?
களவாடிய பொழுதுகள் திரைப்படத்துக்கு இசையமைத்த பரத்வாஜ் பிபிசி தமிழிடம் உரையாடுகையில், ”ஒரு திரைப்படத்தை சந்தைப்படுத்தும் மற்றும் பிரபலப்படுத்தும் சாதனம் பாடல்கள்தான். அந்த வகையில் இந்த திரைப்படத்தில் பாடல்கள் பிரபலாமானது படத்தின் வெற்றிக்கு உதவும்” என்று தெரிவித்தார்.
”இந்த படத்தில் நான் உட்பட எடிட்டர் லெனின் மற்றும் இயக்குநர் தங்கர் பச்சான் போன்ற மூத்த தொழில்நுட்ப கலைஞர்கள் பணியாற்றியுள்ளோம். சிறப்பான முறையில் பங்களித்துள்ளோம். இந்த திரைப்படம் நல்ல முறையில் மக்களை சென்றடையும்” என்று பரத்வாஜ் நம்பிக்கை தெரிவித்தார்.
நீண்ட காலமாக திரைத்துறையில் இருந்தும், தான்அதிகமாக தமிழ் திரைப்படங்களில் இசையமைக்காதது குறித்து பேசிய பரத்வாஜ், ”குறைவான பட்ஜெட்டில் படம் பண்ணும் பலரும் என்னை அணுகுகின்றனர். அந்த படம் ஹிட்டானவுடன் அவர்கள் என்னை மறந்துவிடுகின்றனர்” என்று கூறினார்.
தான் இசையமைத்த பல படங்கள் வெற்றிப் படங்களாக இருந்தாலும், தனக்கு கிடைக்கவேண்டிய அங்கீகாரம் கிடைக்கவில்லை என்று குறிப்பிட்ட பரத்வாஜ், ”பல கதாநாயகர்களும் இளைய மற்றும் புதிய இசையமைப்பாளர்களை தங்களின் தேர்வாக கருதுகின்றனர். பழைய இசையமைப்பாளர்களை அவர்கள் கருதுவதில்லை” என்று கூறினார்.
பாடல்வரிகளை ஆக்கிரமிக்கும் வாத்தியங்களின் ஒலி
”தங்கர் பச்சானுடன் நான் பணியாற்றும் மூன்றாவது திரைப்படம் களவாடிய பொழுதுகள். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள குற்றமுள்ள …. என தொடங்கும் பாடலில், சிறிய மற்றும் ஆழமான நுணுக்கங்களை பயன்படுத்தியுள்ளேன். மன உணர்வுகளை வெளிக்கொணர பல வித்தியாசாமான முயற்சிகளை மேற்கொண்டுள்ளேன். மக்கள் இதனை எந்தளவு கவனிப்பார்கள் என்று தெரியவில்லை” என்று கூறினார்.
தற்காலத்தில் இசை மற்றும் வாத்தியங்களின் ஆதிக்கம் , பாடல்வரிகள் மற்றும் மனித குரலில் வெளிப்படும் உணர்ச்சிகளை பல சமயங்களில் மறைத்து விடுகிறது. இந்த நிலை மாறவேண்டும் என்றும் அவர் கூறினார்.
நீண்ட தாமதத்துக்கு பிறகு வெளியாகும் களவாடிய பொழுதுகள் திரைப்படம் தங்கர் பச்சான் முழுக்க முழுக்க நகர சூழலில் இயக்கியுள்ள முதல் திரைப்படம் என்பதும், பெரிய இடைவெளிக்கு பிறகு பூமிகா நடித்துள்ள திரைப்படம் மற்றும் பிரபுதேவாவை மாறுபட்ட கதாபாத்திரத்தில் காட்டும் படம் என்பதும் இந்த திரைப்படம் குறித்த எதிர்பார்ப்பை அதிகப்படுத்தியுள்ளது என்பது திரைப்பட ஆர்வலர்களின் கருத்தாக உள்ளது.