குளோபல் தமிழ்ச் செய்தியாளர்
பாடசாலை மாணவியான தனது காதலியை கொலை செய்த காதலனுக்கு மரண தண்டனை விதித்து , திருகோணமலை மேல் நீதிமன்ற நீதிபதி மா. இளஞ்செழியன் இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை தீர்ப்பளித்துளார்.
திருகோணமலை பன்குளம் பாடசாலை மாணவியான டில்சானி கடந்த 2010ஆம் ஆண்டு ஜீன் மாதம் 27ஆம் திகதி காணாமல் போன நிலையில் பின்னர் காட்டு பகுதியில் உள்ள நீர் குட்டை ஒன்றுக்கு அருகில் அவரது சடலம் எரியூட்டப்பட்ட நிலையில் எச்சங்களாக மீட்கப்பட்டு இருந்தது.
குறித்த சம்பவம் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த காவல்துறையினர் மாணவியின் காதலனான நிஷாந் ஜயாத் என்பவரையும் அவரது நண்பனான இசுறு சம்பத் சில்வா ஆகியோரை கைது செய்து நீதிவான் நீதிமன்றில் முற்படுத்தினார்கள்.
அதனை அடுத்து நீதிவான் நீதிமன்றில் குறித்த வழக்கு சுருக்க முறையற்ற விசாரணைகள் நடைபெற்று வழக்கு கோவைகள் சட்டமா அதிபர் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
அதனை அடுத்து சட்டமா அதிபர் திணைக்களத்தால் கொலையுண்ட மாணவியின் காதலன் முதலாம் எதிரியாகவும் , அவரது நண்பர் இரண்டாம் எதிரியாகவும் பெயர் குறிப்பிடப்பட்டு திருகோணமலை மேல் நீதிமன்றில் கடந்த ஆண்டு பங்குனி மாதம் 20ஆம் திகதி குற்ற பகிர்வு பத்திரம் தாக்கல் செய்யப்பட்டது.
அதனை அடுத்து குறித்த வழக்கு திருகோணமலை மேல் நீதிமன்றில் நடைபெற்றது. அதன் போது முதலாம் எதிரிக்கும் கொல்லப்பட்ட மாணவிக்கும் இடையில் காதல் தொடர்பு இருந்ததாகவும் , மாணவி படுகொலை செய்யப்படும் போது மூன்று மாத கர்ப்பிணி எனவும் அவரது பாடசாலை நண்பிகளும் உறவினர்களும் சாட்சியம் அளித்திருந்தனர்.
அதேவேளை இரண்டாம் எதிரி தற்போது யாழ்.நீதிவான் நீதிமன்ற நீதிவானாக உள்ள சி. சதிஸ்தரன் முன்னிலையில் குற்ற ஒப்புதல் வாக்கு மூலத்தை வழங்கி இருந்தார். அதில் , கடந்த 27.10.2010ஆம் ஆண்டு நானும் எனது நண்பனும் அவரது காதலியும் காட்டுக்கு சென்று இருந்தோம். அப்போது எனது நண்பனும் அவரது காதலியும் அங்கிருந்த நீர் குட்டையில் இறங்கி நீரில் விளையாடிக்கொண்டு இருந்தார்கள். திடீரென எனது நண்பன் தனது காதலியை நீரில் மூழ்கடித்து கொலை செய்தார். அப்போது எனக்கு 16 வயது சிறுவனாக இருந்தமையால் அதனை தடுக்க முடியவில்லை. என குற்ற ஒப்புதல் வாக்கு மூலம் வழங்கி இருந்தார். அது தொடர்பில் நீதிவான் சி. சதிஸ்தரன் மன்றில் தோன்றி சாட்சியம் அளித்திருந்தார்.
அத்துடன் முதலாம் எதிரியிடம் பெறப்பட்ட வாக்கு மூலத்தின் அடிப்படையில் படுகொலை செய்யப்பட்ட மாணவியின் மோதிரம் , செருப்பு என்பவற்றை மீட்டதாக காவல்துறையினரும் மன்றில் சாட்சியம் அளித்ததுடன் அவர்களால் மீட்கபட்ட சான்று பொருட்களையும் அடையாளம் காட்டினார்கள்.
அதேவேளை குறித்த வழக்கின் முக்கிய சாட்சியங்களாக , மரபணு பரிசோதனையை மேற்கொண்ட விஞ்ஞானி , இரசாயன பகுப்பாய்வு திணைக்கள கையெழுத்து நிபுணர் , துணி புடவை ஒப்பீட்டு நிபுணர் , கொழும்பு பற்கட்டு வைத்திய நிபுணர் மற்றும் கண்டி வைத்திய சாலை சிரேஸ்ட சட்ட வைத்திய நிபுணர் ஆகியோர் மன்றில் தோன்றி தமது நிபுணத்துவ சாட்சியங்களை வழங்கி இருந்தார்கள்.
இந்நிலையில் குறித்த வழக்கு தீர்ப்புக்காக இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை திகதியிடப்பட்டு இருந்த நிலையில் வழக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.
இரண்டாம் எதிரியின் குற்ற ஒப்புதல் வாக்குமூலத்தில் குறித்த கொலை நடந்த தினத்தன்று மூவரும் காட்டுக்குள் சென்றமை, நீர் நிலையில் விளையாடியமை, அம் மாணவி இல்லாமல் இருவர் மாத்திரம் திரும்பி காட்டை விட்டு வெளியே வந்தமை ஆகியன என்பன சாட்சியமாக அமைந்துள்ளது.
மேலும் இரண்டாம் எதிரி பதினாறு வயது சிறுவனாக இருந்ததுடன் அவர் குறித்த கொலை சம்பவத்துடன் நேரடியாக தொடர்புபட்டதாகவோ அல்லது பொது எண்ணத்துடன் கொலை புரிந்தாகவோ அல்லது அதற்கு உடந்தையாக இருந்த்தாகவோ வழக்குத் தொடுநர் தரப்பானது நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் எண்பிக்க தவறி உள்ளது எனவே இரண்டாம் எதிரியை மன்று இந்த வழக்கில் இருந்து விடுதலை செய்கிறது.
இதேவேளை கொல்லப்பட்ட மூன்று மாத கர்ப்பிணியான மாணவியின் காதலனான முதலாம் எதிரிக்கு எதிரான குற்றச்சாட்டுக்கள் சாட்சியங்கள் சான்றுகளின் அடிப்படையில் நியாயமான சந்தேகங்களுக்கு அப்பால் வழக்கு தொடுநர் தரப்பு எண்பித்துள்ளது. எனவே முதலாம் எதிரியை மன்று கொலை குற்றவாளியாக காண்கிறது என தெரிவித்து, குற்றவாளிக்கு மரண தண்டனை விதித்து திருகோணமலை மேல்.நீதிமன்ற நீதிபதி மாணிக்கவாசகர் இளஞ்செழியன் தீர்பளித்தார்.