சபரிமலையில் நாளை மறுநாளம் 5ம் திகதி நடைதிறக்கப்படுவதால் இன்று நள்ளிரவு முதல் 3 நாட்களுக்கு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதுடன் பலத்த காவல்துறை பாதுகாப்பும் போடப்பட்டுள்ளது சபரிமலை கோயிலுக்கு அனைத்து வயது பெண்களும் செல்ல உச்சநீதிமன்றம் அனுமதி வழங்கியதை அடுத்து அதற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ள ஐயப்ப பக்தர்கள் கேரளாவில் பெரிய அளவில் போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் ஐப்பசி மாத நடை திறப்பின் போது சபரிமலைக்கு சென்ற இளம்பெண்களையும் தடுத்து நிறுத்தியமையினால் ஐயப்ப பக்தர்களுக்கும் காவல்துறையினருக்குமிடையில் மோதல் நிலைமை ஏற்பட்டது. இந்த நிலையில் சித்திரை ஆட்ட திருநாள் பிறந்தநாளையொட்டி சபரிமலை சுவாமி ஐயப்பன் கோவில் நடை திங்கட்கிழமை மாலை திறக்கப்பட்டு மறுநாள் காலை முதல் பக்தர்கள் சாமி தரிசனத்திற்கு சன்னிதானத்திற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
இதனையடுத்து இந்த முறையும் சபரிமலைக்கு இளம்பெண்கள் சாமி தரிசனத்திற்கு வர வாய்ப்புள்ளதனால் ஐயப்ப பக்தர்கள் மீண்டும் அவர்களை தடுத்து நிறுத்தி போராட்டம் நடத்த திட்டமிட்டுள்ளனர். இதையொட்டி சபரிமலையில் பலத்த காவல்துறை பாதுகாப்புக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுடன் இன்று நள்ளிரவு 12 மணி முதல் செவ்வாய்க்கிழமை நள்ளிரவு 12 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது