நாட்டின் புதிய பிரதமராக பதவியேற்றுள்ள மகிந்த ராஜபக்ஸவிற்கு தமது ஆதரவில்லை என்று தமிழ் தேசியக் கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினரும் புளொட் அமைப்பின் தலைவருமான த.சித்தார்த்தன் தெரிவித்துள்ளார். .நேற்றைய தினம் தமது கட்சியின் மத்திய குழு கூட்டம் நிறைவுற்ற பின்னர், ஊடகங்களுக்கு கருத்து கூறிய போதே அவர் இதனை தெரிவித்துள்ளார்.
நாட்டின் பிரதமர் மாற்றமானது அரசியல் ரீதியாக பெரும் சர்ச்சைகளையும் குழப்பங்களையும் உருவாக்கியுள்ளதாகவும் அரசியலமைப்புக்கு விரோதமான ஒரு செயற்பாடாகவே தமிழ் தேசிய கூட்டமைப்பு இதனை பார்ப்பதாகவும் தெரிவித்த அவர் இதனால் புதிய பிரதமரை ஆதரிக்க போவதில்லை என்ற தீர்மானத்தை எடுத்துள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.
அத்துடன் மகிந்த ராஜபக்ச அரசுடன் இணைந்து அமைச்சுப் பதவியை வாங்கியுள்ள மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் வியாழேந்திரனை புளொட் தமது அமைப்பி்லிருந்து நீக்கியிருப்பதாகவும் அவரை கூட்டமைப்பில் இருந்து நீக்கவுள்ளதாகவும் சித்தார்த்தன் தெரிவித்துள்ளார்.
இதேவேளை வியாழேந்திரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் அவரது பாராளுமன்ற பதவி பறிக்கப்படும் எனவும் எதிர்கட்சித் தலைவர் இரா சம்பந்தன் தெரிவித்திருந்தமையும் குறிப்பிடத்தக்கது.