மகிந்த ராஜபக்ஸவை ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன பிரதமராக நியமித்ததன் பின்னர் முதல்தடவையாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க பண்டாரநாயக்கா பொது நிகழ்வொன்றில் இன்று கலந்துகொண்டுள்ளார். கொழும்பில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் மாதுளவாவே சோபித தேரர் நினைவுநிகழ்வில் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க கலந்துகொண்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சிலர் ரணில்விக்கிரமசிங்கவை ஆதரிக்க திட்டமிட்டுள்ளனர் என்ற தகவல்கள் வெளியாகிவரும் சூழ்நிலையிலேயே முன்னாள் ஜனாதிபதி சில வாரங்களிற்கு பின்னர் பொது நிகழ்வொன்றில் கலந்துகொண்டுள்ளார். பொதுவேட்பாளரிற்கான தேவையை தனியொருநபராக மக்கள் முன்கொண்டு சென்ற மாதுளவாவே சோபித தேரரின் நினைவு நிகழ்வில் சபாநாயகர் கருஜெயசூரியவும், தமிழ்தேசிய கூட்டமைப்பை பிரதிநிதித்துவம் செய்யும் வகையில் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரனும் கலந்துகொணடுள்ளனர்.
நல்லாட்சி அரசாங்கம் அமைவதிலும் பொதுவேட்பாளராக சிறிசேன நிறுத்தப்படுவதிலும் முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா குமாரதுங்க முக்கிய பங்களிப்பு வழங்கியிருந்தார் என்பதும், சிறிலங்கா சுதந்திரக் கட்சியில் சந்திரிக்காவின் விசுவாசிகள் பலர் இன்னும் இருக்கிறார்கள் என்பதும் குறிப்பிடத்தக்கது.