குற்றப் பின்னணி குறித்த விவரங்களைத் தொலைக்காட்சிகள் மற்றும் பத்திரிகைகளில் வெளியிடாத வேட்பாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என இந்திய தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.
அரசியலில் குற்றப் பின்னணி கொண்டவர்களின் எண்ணிக்கை அதிகமாகி வருவதனைத் தடுக்கும் நோக்குடன் அத்தகைய பின்னணி கொண்டவர்களுக்கு தேர்தலில் போட்டியிட தடை விதிக்கக்கோரி உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டிருந்தது.
அண்மையில் இந்த வழக்கைச் விசாரித்த உச்ச நீதிமன்றம், தேர்தல் நேரங்களில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் குற்றப் பின்னணி விவரங்களை ஊடகங்களில் தெரியப்படுத்த வேண்டும் எனவும் அதன் பின்னர் யாருக்கு வாக்களிக்க வேண்டும் என்பதை மக்களே முடிவு செய்து கொள்வார்கள் எனவும் தீர்ப்பு வழங்கியிருந்தது.
இந்தத் தீர்ப்பின்படி கடந்த ஒக்டோபர் 10ஆம் திகதி தேர்தல் ஆணையகம் பிறப்பித்திருந்த உத்தரவில் சத்தீஸ்கர், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மிசோரம், தெலங்கானா ஆகிய ஐந்து மாநிலச் சட்டப்பேரவைத் தேர்தலில் அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், சுயேச்சை வேட்பாளர்கள் தங்களின் குற்றப் பின்னணி குறித்த தகவல்களைத் தொலைக்காட்சி, பத்திரிகைகளில் குறைந்தபட்சம் மூன்று முறையாவது வௌ;வேறு திகதிகளில் மக்கள் அறியும்படி கட்டாயம் விளம்பரம் செய்ய வேண்டும் எனத் தெரிவித்திருந்தது. அவ்வாறு ஊடகங்களில் அளிக்கப்பட்ட விளம்பரம் குறித்த ஆதாரங்களைத் தேர்தல் ஆணையகத்தில் சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தது.
இந்தநிலையில் இவ்வாறு குற்ற விவரங்களை விளம்பரம் செய்யாத அரசியல் கட்சிகள், வேட்பாளர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரித்துள்ள தேர்தல் ஆணையகம், குற்றவியல் விவரங்களைத் தாக்கல் செய்யாமல் வெற்றி பெறும் வேட்பாளர்களுக்கு எதிராக மற்றொரு வேட்பாளரோ அல்லது வாக்காளரோ அந்தந்த மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர முடியும் எனவும் தெரிவித்துள்ளது
இதுமட்டுமின்றி, எதிர் தரப்பு வேட்பாளர்கள் குறித்து தவறான தகவல்களைப் பத்திரிகைகளில் விளம்பரம் செய்தால், அவ்வாறு செய்தவர் மீது அபராதமோ அல்லது குற்றவியல் நடவடிக்கையோ எடுக்கப்படும் எனவும் தேர்தல் ஆணையகம் எச்சரித்துள்ளது.