கஜா புயலின் தாக்கம் நீடிப்பதால் வடக்கு மாகாண பாடசாலைகள் இன்று(16) மூடப்படும் என்று மாகாண ஆளுநர் றெஜினோல் குரே அறிவித்துள்ளார். கஜா புயல் காரணமாக யாழ்ப்பாணம் உள்பட்ட வடக்கின் பல பகுதிகளில் மழையுடனான காலநிலை நீடிப்பதால் பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கப்படுவதாக அவர் அறிவித்துள்ளார்.
இதேவேளை, தற்போது பரீட்சைகள் நடைபெறுவதால் பெரும்பாலான பெற்றோர் தமது பிள்ளைகளை பாடசாலைக்கு அழைத்துச் சென்ற நிலையிலேயே ஆளுநரின் இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மேலும் , காலநிலை சீரின்மை காரணமாக பாடசாலைகளில் இன்று தவணைப் பரீட்சைகளை நடாத்த வேண்டாமென மாகாணக் கல்விப் பணிப்பாளர் அறிவுறுத்தியுள்ளார்.மறு திகதி பின்னர் அறிவிக்கப்படும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும் இந்த விடுமுறையானது இன்றைய தினம் பாடசாலை ஆரம்பித்து மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் பாடசாலைக்கு சென்ற பின் அறிவிக்கப்பட்டதன் காரணமாக மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமங்களுக்கு உள்ளாகினர்.
தூரப் பிரதேச பாடசாலைகளில் கடமையாற்றும் ஆசிரியர்கள் இந்த செயற்பாடு குறித்து கடும் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மழைக்கு மத்தியிலும் மாணவர்கள் பாடசாலைக்கு சென்றிருந்த நிலையில் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளதால் மாணவர்களும் ஆசிரியர்களும் சிரமங்களுக்கு முகம் கொடுத்துள்ளனர்.
மேற்குறித்த விடயம் இவ்வாறு விமர்சம் வெளிவந்துள்ள நிலையில் பாடசாலை ஆரம்பமாகிய பின்னர் விடுமுறை அறிவிப்பு தொடர்பாக ஆளுநர் விளக்கமளித்துள்ளார்.
அதில் கஜா புயல் பாரிய தாக்கத்தினை ஏற்படுத்தும் என்ற நிலை நேற்று(15) மாலைவரையில் உணரப்படாத நிலையில் பாடசாலைகளில் மூன்றாம் தவணை பரீட்சை க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கான முன்னோடிப் பரீட்சைகள் நடைபெற்று வருவதன் காரணமாக திட்டமிட்டு பாடசாலைக்கு விடுமுறை வழங்குவது தாமதமானது.
ஆயினும் இன்று(16) காலை பாதிக்கப்பட்ட பகுதி பாடசாலை மாணவர்களின் நலன்கருதிஇந்த தீர்மானம் எடுக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டது. பாதிக்கப்பட்ட பகுதி வலய பாடசாலைகளுக்கு மட்டும் விடுமுறை வழங்குவதாயின் பரீட்சை நடாத்தாது விடுவதாயின் வடமாகாணம் முழுவதுக்கும் பரீட்சை நடாத்தாது இருத்தல் வேண்டும் இதனை கருத்தில் கொண்டு கல்வித்திணைக்கள அதிகாரிகளின் ஆலோசனையுடன் இணைந்து இந்த முடிவு எடுக்கப்பட்டது என தெளிவு படுத்தியுள்ளார்.
பாறுக் ஷிஹான்