434
இம்சை அரசன் 24ஆம் புலிகேசி திரைப்படத்தில் நடிக்க முடியாது என்று பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு கூறி வந்த நிலையில், தற்போது சமரச நிலை ஏற்பட்டுள்ளமையால், விரைவில் இப் படத்திற்கான படப்பிடிப்புக்கள் ஆரம்பிக்கப்படவுள்ளன.
2006ஆம் ஆண்டில் சிம்பு தேவன் இயக்கத்தில் வடிவேல் கதாநாயகனாக நடித்து வெளிவந்த இம்சை அரசன் 23-ம் திரைப்படம் ரசிகர்களிடையே பெரும் வரவேற்பை பெற்றது. இந்நிலையில் புலிகேசி படத்தின் இரண்டாம் பாகத்தை ‘இம்சை அரசன் 24-ம் புலிகேசி’ என்ற பெயரில் இயக்குனர் ஷங்கர் தயாரிக்க முடிவு செய்து அதற்கான பணிகளும் நடைபெற்று வந்தன.
இதற்கிடையே சில கருத்து வேறுபாடுகள் காரணமாக வடிவேலு இம்சை அரசன் இரண்டாம் பாகத்தில் இருந்து வெளியேறுவதாக அறிவித்தார். இதனால் தனக்கு நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக ஷங்கர் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் சங்கத்தை நாடினார்.இதனால் நடிகர் வடிவேலுக்கு சினிமாவில் தடை விதிக்கப்பட இருப்பதாக கூறப்பட்டது.
இருந்த போதும் வடிவேலு திரைப்படத்தில் நடிப்பதற்கு தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தார். இந்த நிலையில், இம்சை அரசன் படக்குழுவுக்கும், வடிவேலுவுக்கும் இடையே சுமூகம் ஏற்பட்டுவிட்டதாக தகவல் வெளியாகி இருக்கிறது. தற்போது மதுரையில் இருக்கும் வடிவேலு, படப்பிடிப்புக்காக சென்னை வர சம்மதித்திருப்பதாக கூறப்படுகிறது.
இந்த நிலையில், பிரச்சினை முடிவுக்கு வந்திருப்பதால் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு ஜனவரியில் தொடங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. படப்பிடிப்பு குறித்த நேரத்தில் தொடங்கும் பட்சத்தில் படம் அடுத்த ஆண்டு தீபாவளிக்கு இம்சை அரசன் 24ஆம் புலிகேசி வருகை தந்து ரசிகர்களை சிரிக்க வைப்பார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Spread the love