பிரதமர் மகிந்த ராஜபக்ஸவிற்கு பாராளுமன்றில் பெரும்பான்மையில்லை என்பதை தான் ஏற்றுக்கொள்வதாகவும் டிசம்பர் மாதம் 5ஆம் திகதி பெரும்பான்மையை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக உள்ளதாகவும் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்ததாக தமிழ்த் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
தமிழ்த் தேசிய கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் தலைமையிலான 13 கூட்டமைப்பினர் நேற்றிரவு ஜனாதிபதியை அவரது அலுவலகத்தில் சந்தித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.
மகிந்தவை பிரதமராக நியமிக்கும் போது அது தொடர்பில் தமிழ்த் தேசிய கூட்டமைப்புடன் கலந்தாலோசிக்காமை தவறு என்பதை தான் உணர்வதாகவும் ஜனாதிபதி தெரிவித்ததாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
ஆட்சி மாற்றத்தின் பின் கடந்த 14ஆம் திகதி பாராளுமன்ற அமர்வு ஆரம்பிக்கப்பட்ட பின்னர் புதிய அரசிற்கு எதிராக பாராளுமன்றில் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. சில தீர்மானங்கள் குரல் பதிவு வாக்கெடுப்பு மூலமும் சில தீர்மானங்கள் இலத்திரனியல் வாக்கெடுப்பு மூலமும் நிறைவேற்றப்பட்டுள்ளன.
எனினும் மகிந்தவுக்திரான நம்பிக்கையில்லா பிரேரணை மீதான வாக்கெடுப்பு குரல் பதிவு வாக்கெடுப்பு மூலம் தான் நடந்துள்ளது.
ஒரு நாட்டின் ஆட்சியைத் தீர்மானிக்கும் இந்த விடயத்தில் குரல் பதிவு வாக்கெடுப்பு முறையை ஏற்றுக்கொள்ள மாட்டேன். எனவே எதிர் வரும் 5ஆம் திகதி மகிந்தவுக்கெதிராபன நம்பிக்கையில்லா பிரேரணை மீது பெயர் கூறி அல்லது இலத்திரனியல் வாக்கெடுப்பை நடாத்தி அதில் பெரும்பான்மைப் பலத்தை நிரூபிக்கும் தரப்பிடம் ஆட்சியை ஒப்படைக்க தயாராக உள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலும் இவ் வாக்கெடுப்பின் போது ஒரு வேளை பெரும்பான்மை பலத்தை ஐக்கிய தேசிய முன்னணி பெற்றால் அத் தரப்பினர் பிரதமர் பதவிக்கு ரணில் விக்ரமசிங்கவை பரிந்துரை செய்தால் அதனை ஏற்க தயாராக இல்லை எனவும் ஐக்கிய தேசிய முன்னணியில் வேறு பெயர்களை பரிந்துரை செய்தால் அதனை தான் ஏற்பேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்க பிரதமர் பதவியில் கடந்த 3 வருடங்களாக இருந்த போதும் அவருடன் சேர்ந்து பணியாற்றியுள்ளேன். ஆனால் அவர் என்னை மதிக்கவில்லை, அரசியல் ரீதியிலும் பொருளாதார ரீதியிலும் ஊழல் மோசடி விடயங்களிலும் அவர் தான்தோன்றித்தனமாக முடிவுகளை எடுத்தார். அதனால் தான் அவரை பிரதமர் பதவியிலிருந்து நான் அகற்றினேன். இந் நிலையில் மீண்டும் அவரை பிரதமர் பதவியில் நான் எவ்வாறு அமர்த்துவது என ஜனாதிபதி கேள்வியெழுப்பியதாகவும் கூட்டமைப்பினர் தெரிவித்துள்ளனர்.