மழை காலம் முடிந்து குளிர் தொடங்கும் மார்கழி மாதமிது.மாதங்களில் மார்கழியை உன்னதமானதெனப் போற்றுகின்றனர். மார்கழி பள்ளி செல்ல முனைகின்ற சிறுவர்களுக்கு மிகவும் முக்கியமான மாதம் எனலாம். புதிய வகுப்புக்குச் செல்லுகின்ற நிகழ்வு பெரும்பாலும் மார்கழியிலேயே நடைபெறுகிறது. குழந்தையாய் வீட்டோடு இருந்தவர்கள் கல்வி உலகத்தைக் காண விழைகின்றதற்குத் திறவுகோலாக முன்பள்ளிகள் காணப்படுகின்றன. என்னைப் பொறுத்தவரை முன்பள்ளியை நான் நாற்றுமேடை என்பேன்.விதைகளைக் கன்றுகள் என்ற நிலைக்குத் தயாராக்குகின்ற செயற்பாடுகளே முன்பள்ளிகளின் பணியாகக் காணப்படுகின்றது.
சமூகத்தில் ஆழமாகச் சென்று மனித வாழ்வின் ஒவ்வொரு கணங்களிலும் தன்னை பிரதிபலிக்கச் செய்த ஊடகங்களின் வலிமையோ என்னவோ! சிறார்கள் கூச்சமின்றி இயல்பாக மேடைகளை அலங்கரிக்கப் பழகிவிட்டனர். எமது சிறு வயது வாழ்வியலோடு ஒரு ஒப்பீட்டைச் செய்ததன் விளைவே மேற்சொன்ன விடயம் எனது கருத்தாக அமைகிறது.
சொல்லிக் கொடுப்பதை அதன் சுவை மாறாது ஒப்புவிப்பதில் அவர்கள் திறமையுள்ளவர்கள் என்றதை திரும்பத் திரும்ப நிரூபித்துக் கொண்டிருந்தனர் அந்தச் சிறுவர்கள். 09.12.2018 அன்று நடைபெற்ற இணுவில் பொது நூலகத்தினால் நடத்தப்பட்டுக் கொண்டிருக்கின்ற முன்பள்ளிக் கலைவிழாவிலேயே அந் நிகழ்வை நான் கண்டேன்.
அந்தச் சிறுவர்களின் திறமைகளை இனங்கண்டு அவர்களுக்கேற்றவாறு உடைகளைத் தயாரித்து நிகழ்வினை ஒருங்கமைத்த ஆசிரியைகள் பாராட்டுக்குரியவர்கள். எல்லோரும் இளவயதினர். ஆனாலும் குழந்தைகளை எப்படி ஆட்சி செய்வதென்ற கலையை அவர்கள் நன்கறிந்திருக்கின்றனர். நேரத்தைக் கடைப்பிடிப்பதொரு நேர்த்தியான செயற்பாடு என்றதற்கமைய குறித்த நேரத்தில் நிகழ்வு ஆரம்பமாகியது. அதிதிகள் அதற்கு ஒத்தாசை வழங்கியிருந்தனர்.
எங்கு சென்றாலும் குழந்தை மனமும் இயல்பும் என்றும் மாறாதவை. இருந்தும் சூழலுக்கும், வசதி வாய்ப்புகளுக்கும் ஏற்றவாறு அவர்கள் போக்கு மாறுபடும். அபிவிருத்தியை நோக்கி நின்றாலும், இணுவில் இன்னும் கிராமத்தின் களையை முற்றாக இழக்கவில்லை. கலை, கலாசாரம், பண்பாடு.மரபு என்று எல்லாமே அங்கு அப்படியே உண்டு. அத்தகைய சூழலில் இருந்து கொண்டு அவர்கள் தமிழ் மொழியோடு பிறமொமிகளையும் கற்றுக் கொள்வதென்பது விசேடமானது. அதற்குச் சான்றாகப் பல கலை நிகழ்வுகள் ஆங்கிலத்திலும் நடைபெற்றது. இயல்போடு அவற்றை செய்தளித்தது சிறப்பாக இருந்தது. முன்பள்ளிப் படிப்பை முடித்துக் கொண்டு அடுத்த வருடம் பள்ளிக் கூடங்களுக்குச் செல்பவர்களுக்கென பட்டமளிப்பு விழா போன்றதொரு நிகழ்வினை நடத்தியிருந்தனர். அந்த முன்பள்ளி நிர்வாகமும், ஆசிரியைகளும், சிறுவர்களும் பாராட்டுக்குரியவர்கள்.