பிரான்சில் இரண்டு வாரங்களாக தீவிரமாக நடந்துவரும் மஞ்சள் சட்டைப் போராட்டத்தின் விளைவாக சட்டப்பூர்வ குறைந்தபட்ச ஊதியத்தினை உயர்த்தவும், வரிச்சலுகைகள் அளிக்கவும் பிரான்ஸ் ஜனாதிபதி இமானுவல் மக்ரோன் ஒப்புக்கொண்டுள்ளார்.
எரிபொருள் விலை உயர்வுக்கு எதிராகத் தொடங்கிய இந்தப் போராட்டம், வாழக்கைச் செலவுகள் அதிகரிப்பது உள்ளிட்ட பிற பிரச்சினைகளையும் முன்னிறுத்தியிருந்தது.
தொலைக்காட்சி வழியாக இந்தப் போராட்டம் குறித்துப் பேசிய மக்ரோன் போராட்டத்தின் போது இடம்பெற்ற வன்செயல்களைக் கண்டித்த அதே நேரம், போராட்டக்காரர்களின் கோபம் ஆழமானது என்பதுடன் பலவழிகளில் நியாயமானது எனவும் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன் 2019 முதல் குறைந்தபட்சக் ஊதியம் மாதம் 100 யூரோ அதிகரிக்கும் எனவும் குறைந்த ஓய்வூதியங்களின் மீதான வரிவிதிப்பை அதிகரிக்கும் திட்டம் கைவிடப்படும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
அதைப் போன்று மேலதிக வேலை செய்வதற்காகப் பெறும் ஊதியத்துக்கு இனி வரிவிதிக்கப்படமாட்டாது எனவும் , நிறுவனங்கள் தங்கள் ஊழியர்களுக்கு வரியில்லா ஆண்டிறுதி போனஸ் வழங்க ஊக்குவிக்கப்படுவார்கள் எனவும் மக்ரோன் தெரிவித்தார்.
அதேவேளை செல்வந்தர்கள் மீதான ஒரு வரியை மீண்டும் விதிக்கவேண்டும் என்ற கோரிக்கையை நிராகரித்த மக்ரோன ;இது தம்மை பலவீனப்படுத்திவிடும் எனவும் தாம் வேலைகளை உருவாக்கியாகவேண்டும் எனவும் தெரிவிதிதுள்ளார்.