ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் இன்று நள்ளிரவில் இருந்து ஜனாதிபதி ஆட்சியை பிரகடனப்படுத்தும் உத்தரவில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் கையொப்பமிட்டுள்ளார். ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சி பா.ஜ.க. ஆதரவுடன் கடந்த கடந்த 2015 மே; ஆண்டு ஆட்சி அமைத்திருந்த நிலையில் ஜம்மு-காஷ்மீர் மக்கள் ஜனநாயக கட்சியின் தலைவர் முப்தி முகம்மது சயீத் முதலமைச்சராகவும் , பா.ஜ.க.வின் நிர்மல் சிங் துணை முதலமைச்சராகவும் பொறுப்பேற்றனர்.
இந்தநிலையில் முப்தி முகம்மது சயீத் மறைவுக்கு பின்னர் அவரது மகள், மெகபூபா முப்தி தலைமையில் அம்மாநிலத்தில் கூட்டணி ஆட்சி நடைபெற்று வந்த நிலையில் கூட்டணி கட்சிகளுக்குள் ஏற்பட்ட கருத்து மோதல் காரணமாக கூட்டணி அரசில் இருந்து விலகுவதாக கடந்த ஜூன் மாதம் பா.ஜ.க. அறிவித்தது. இதனையடுத்து மெகபூபா முப்தி முதலமைச்சர் பதவியிலிருந்து விலகியதனையடுத்து அங்கு ஆளுனர் ஆட்சி அமுல்படுத்தப்பட்டதுடன் சட்டசபையும் கலைக்கப்பட்டது.
கடந்த ஆறு மாதங்களாக நடைபெற்றுவந்த ஆளுனர் ஆட்சி இன்றுடன் முடிவடையும் நிலையில் காஷ்மீர் அரசியல் நிலவரம் தொடர்பாக நேற்று பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற ஆலோசனை கூட்டத்தில் அங்கு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசு பரிந்துரைத்தது.
இந்த பரிந்துரையை ஏற்று இன்று நள்ளிரவு முதல் ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்தும் பிரகடனத்தில் ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் இன்று மாலை கையொப்பமிட்டார். எனவே, இன்று நள்ளிரவு முதல் அடுத்த ஆறுமாத காலம்வரை அங்கு ஜனாதிபதி ஆட்சி அமுலில் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது