கிறிஸ்மஸ் நாளான நேற்றையதினம் ஆங்கிலக் கால்வாயின் வேறுவேறு இடங்களில் தத்தளித்த 2 குழந்தைகள் உட்பட 40 பேர் கடலோர பாதுகாப்பு படையினர் மீட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது இவர்கள் படகுகள் மூலம் ஆங்கிலக் கால்வாயைக் கடந்து பிரித்தானியாவுக்குள் நுழைய முயன்றுள்ளனர் எனவும் இவர்கள் ஆட்கடத்தும் குழு மூலம் சட்டவிரோதமாக அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் சிலர் பாதுகாப்பு உடை அணியாமல் சாதாரண படகில் பயணம் செய்துள்ளனர் எனவும் ஒரு படகு பழுதடைந்ததால் அதில் பயணித்தவர்கள் தத்தளித்துக்கொண்டிருந்த நிலையில் கடலோர காவல்படை வீரர்கள் ஹெலிகொப்டர் மூலமாகவும், படகுகளில் சென்றும் அவர்களை மீட்டுள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீட்கப்பட்ட அனைவருக்கும் மருத்துவ உதவிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் குழந்தைகள் இருவரும் பாதுகாப்பு மையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மீட்கப்பட்டவர்கள் ஈராக், ஈரான் மற்றும் ஆப்கானிஸ்தானைச் சேர்ந்தவர்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது