சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் போன்றவற்கு உதாரணமாக விளங்கும் சிக்கிம் மாநிலத்தின் தூதர் பணியை ஏற்பதில் பெருமையடைவதாக இசைப்புலயல் தெரிவித்துள்ளார். சிக்கிம் மாநிலத்தின் தலைநகரான காங்டாக்கில் அந்த மாநில அரசு சார்பில் இடம்பெற்ற குளிர்கால திருவிழாவில் சிறப்பு விருந்தினராக ஏ.ஆர்.ரகுமான் கலந்து கொண்டிருந்தார்.
இந்தநிலையில் விழாவுக்கு தலைமை தாங்கிய சிக்கிம் மாநில முதலமைச்சர் பவன்குமார் சாம்லிங், ஏ.ஆர்.ரகுமான் சிக்கிம் மாநில விளம்பர தூதராக பணியாற்ற வேண்டும் என கோரிக்கை விடுத்திருந்தார். அதனை ஏற்றுக் கொண்ட ஏ.ஆர்.ரகுமான் சிக்கிம் மாநிலம் சகிப்புத்தன்மை, ஒற்றுமை, அமைதி, சமூக நல்லிணக்கம் ஆகியவற்றுக்கு உதாரணமாக திகழ்கிறது. தனக்கு முக்கியத்துவம் அளித்து தன்னை கௌரவிக்கும் விதமாக அளித்த தூதர் பணியை தான் பெருமையுடன் ஏற்றுக்கொள்கிறேன் எனவும் அதை சிறப்புடன் மேற்கொள்வேன் எனவும் தெரிவித்துள்ளார்.
இதன்மூலம், ஏ.ஆர்.ரகுமானுக்கு அந்த மாநிலத்தின் அமைச்சர்களுக்கு உரிய அனைத்து அந்தஸ்தும் கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது