ஐந்தாயிரம் கிலோ மீட்டருக்கும் அப்பால் சென்று கண்டம் விட்டு கண்டம் பாயும் அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக ஏவியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. ஒடிசா மாநில கடலோரத்தில் இன்று வியாழக்கிழமை காலை வெற்றிகரமாக ஏவப்பட்டதாகவும் தெரிவித்துள்ளது.
தற்போது இந்தியாவிடம் உள்ள ஏவுகணைகளிலேயே அதிக தூரம் சென்று தாக்கக்கூடியதும் அதிக துல்லியத்துடன் இலக்கை அடையும் திறன் உடையதாகவும் இந்த ஏவுகணை உள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அணு ஆயுதங்களைத் தாங்கிச் செல்லக்கூடிய திறன் உடைய இந்த ஏவுகணை ஒரு வருடத்துக்கு முன்னர் சோதனை செய்யப்பட்டிருந்தது.
அக்னி-5 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளதன் மூலம், நீண்ட தூரம் சென்று கண்டம் விட்டுக் கண்டம் பாயும் ஏவுகணைகளை வைத்திருக்கும் அமெரிக்கா, பிரித்தானியா சீனா, ரஷ்யா மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளின் பட்டியலில் இந்தியாவும் இணைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது