காலி துறைமுகம் அருகே 147 வருடங்களுக்கு முன்பு மூழ்கிய ரங்கூன் தபால் சேவை கப்பல் கடல்சார் தொல்பொருள் அதிகாரிகளால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.இங்கிலாந்தில் 1516-ம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்ட ரோயல் மெயில் (Royal mail ) நிறுவனம் தபால் சேவை அளித்து வருகிறது.
இந்தநிலையில் 19-ம் நூற்றாண்டில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பனி சார்பாக ரோயல் மெயில் நிறுவனம் இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இடையே தகவல் பரிமாற்ற வசதிக்காக கப்பல் மூலம் தபால் சேவையைத் ஆரம்பித்திருந்தது. இதன் ஒரு பகுதியாக 1815-ம் ஆண்டு கொழும்பு, காலி, மாத்தறை, திருகோணமலை, யாழ்ப்பாணம், மன்னார் ஆகிய ஆறு இடங்களில் அஞ்சல் அலுவலகங்கள் ஆரம்பிக்கப்பட்டன.
இதனைத் தொடர்ந்து 1838-ம் ஆண்டு கொழும்புக்கும் காலிக்குமிடையில் குதிரை வண்டி தபால் சேவையும், 1850-ம் ஆண்டில் கொழும்புக்கும் காலிக்கும் இடையில் அவசர தபால் சேவை புறாக்கள் மூலம் அனுப்பப்பட்டது. இந்தநிலையில் 1871 ஆண்டு நவம்பர் முதலாம் திகதி காலி துறைமுகம் அருகே மூழ்கிய ரோயல் மெயில் நிறுவனத்திற்குச் சொந்தமான ஆர்.எம்.எஸ். ரங்கூன் என்ற தபால் சேவை கப்பல் 147 ஆண்டுகளுக்கு பின்னர் தற்போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. காலி துறைமுகத்திலிருந்து 2 மைல் தொலைவில் இந்தியப் பெருங்கடலில் 25 மீட்டர் ஆழத்தில் முழ்கிய நிலையில் இலங்கையின் கடல்சார் தொல்பொருள் அதிகாரிகள் இதனை கண்டுபிடித்துள்ளனர்.
ரங்கூன் தபால் சேவை கப்பல் 1863-ம் ஆண்டு இங்கிலாந்தில் சமுத்ரா சகோதரர்களால் கட்டப்பட்டது. இதன் நீளம் 89.85 மீட்டர், அகலம் 11.61 மீட்டர் மற்றும் ஆழம் 5.36 மீட்டர் ஆகும். 1,776 தொன் எடையுள்ள இந்த கப்பல் நீராவி மூலம் இயக்கக்கூடியது. 1.870 குதிரைத்திறன் கொண்ட இந்த கப்பல் ஒரு மணி நேரத்திற்கு 12 மைல் வேகத்தில் பயணிக்கக்கூடியது.
கடலின் ஆழம் காரணமாக கப்பலின் பெரும்பாலான பகுதிகள் மணலால் மூடப்பட்டு காணப்படுகின்றது. அத்துடன் டைனமைட் மீன்பிடியின் காரணமாக கப்பலில் பெரும்பாலான பகுதிகள் சிதறிக் காணப்படுகின்றன. இதில் கப்பலின் நீராவி டாங்கிகள், புரோப்பல்லர் ஆகியன உறுதி செய்யப்பட்டுள்ளன.
மேலும், இந்த மூழ்கிய கப்பலை கடல்சார் தொல்பொருள் அதிகாரிகள் தொடர்ந்து ஆய்சு செய்து வருகினறனர் என்பதும் குறிப்பிடத்தக்கது