உடுமலைப்பேட்டை படுகொலை: துயரத்தை கடந்து சமத்துவத்திற்காக போராடும் கௌசல்யா…
2016 ஆம் ஆண்டு மார்ச் மாதம், தென்னிந்தியாவிலுள்ள பரபரப்பாக இயங்கிக்கொண்டிருந்த ஊரில் 22 வயதான ஆண் ஒருவர் தன்னைவிட உயர்சாதியை சேர்ந்த பெண்ணை திருமணம் செய்துகொண்டதற்காக பட்டப்பகலில் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். அவரது மனைவி தாக்குதலில் இருந்து தப்பியோடி, தனது பெற்றோருக்கு எதிராக சாட்சியத்தை கூறியதுடன், சாதிச் சண்டைகளுக்கெதிரான தனது பிரச்சாரத்தையும் தொடங்கியுள்ளதாக எழுதுகிறார் பிபிசியின் செய்தியாளராக சௌதிக் பிஸ்வாஸ்.
தனது வாழ்க்கையின் கடைசி நாளன்று சங்கர் மற்றும் அவரது மனைவியான கௌசல்யா காலை ஒன்பது மணியளவில் தங்களது கிராமத்திலுள்ள குடிசையிலிருந்து எழுந்தனர். அப்போது, அவர்களுக்கு திருமணமாகி எட்டு மாதங்கள் ஆகியிருந்தது.
அது ஞாயிற்றுக்கிழமை, அவர்கள் தங்கியிருந்த கிராமத்திலிருந்து 14 கிலோ மீட்டர் தூரத்திலுள்ள உடுமலைப்பேட்டையின் உள்ளூர் சந்தைக்கு பேருந்தில் பயணம் செய்தனர். மறுநாள் தனது கல்லூரியில் நடக்கவுள்ள நிகழ்ச்சியில் பங்கேற்பதாக இருந்த சங்கருக்கு புதிய ஆடையை வாங்க ஆர்வமாக இருந்தனர்.
அவர்கள் ஒரு துணிக்கடைக்குள் சென்ற நேரத்தில் சூரியன் சுட்டெரித்து கொண்டிருந்தது. கௌசல்யா தனது கணவருக்கு நன்றாக இருக்கும் என்று எண்ணி பிங்க் நிற சட்டையை தேர்ந்தெடுத்தாள். பிறகு அக்கடையிலிருந்து வெளியே வந்தவுடன் அங்கு ஒரு பொம்மையில் மாட்டப்பட்டிருந்த பச்சை நிற சட்டையொன்றை சங்கர் பார்த்தார். “எனக்கு இந்த சட்டை பிடித்திருக்கிறது என்று நினைக்கிறேன்” என்ற சங்கர் கூறினார்.
சர்வசாதாரணமாக நடந்த கொலை
அவர்கள் மீண்டும் கடைக்குள் சென்று பிங்க் நிற சட்டையை அளித்துவிட்டு பச்சை நிற சட்டையை வாங்கிக்கொண்டு தங்கள் வீட்டிற்கு செல்வதற்குரிய பேருந்தை பிடிப்பதற்காக சாலையை கடக்க முயன்றனர். ஆனால், அதற்கு முன்பாகவே கௌசல்யாவுக்கு பிடித்தமான உணவொன்றை வாங்கி தருவதற்கு சங்கர் விரும்பினார். ஆனால், “இன்னொரு நாள் பார்த்துக்கொள்ளலாம்” என்று கௌசல்யா கூறிவிட்டார்.
ஏனெனில், அப்போது கௌசல்யாவின் பர்சில் வெறும் அறுபது ரூபாய் மட்டுமே இருந்ததால் அவர்களால் அதை வாங்க இயலவில்லை. எனவே, அவர்கள் வீட்டிற்கு திரும்புவதற்கு முடிவெடுத்ததனர். மேலும், வீடு சென்று சேர்ந்ததும் கௌசல்யாவுக்கு சிறப்பான உணவை சமைத்து தருவதாக சங்கர் உறுதியளித்தார்.
கண்காணிப்பு கேமராவின் காட்சிகள் இருவரும் மிடுக்குடன் சாலையை கடக்க முயல்வதை காண்பிக்கிறது. ஆனால், அவர்கள் சாலையை கடப்பதற்கு முன்னர் இரண்டு பைக்குகளில் வந்த ஐந்து ஆண்கள் இருவரையும் சுற்றி வளைத்தனர். அதிலிருந்த நான்கு ஆண்கள் தங்களிடம் இருந்த பெரிய அரிவாள்களை கொண்டு இந்த தம்பதியினரை சராமாரியாக தாக்கத் தொடங்கினர். புதர்களை வெட்டுவதுபோல் அவர்கள் சர்வசாதாரணமாக வெட்டினார்கள்.
சம்பவம் நடந்தேறிய இடத்திலுள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகிய காட்சி
ரத்தம் அதிகளவில் வெளியேறிய நிலையிலும் சங்கர் அங்கிருந்து தப்பித்தோட முயன்றார். அருகிலிருந்த கடையை நோக்கி ஓட முயன்ற கௌசல்யா மீண்டும் தாக்குதலாளிகளால் தடுக்கப்பட்டார்.
இவை அனைத்தும் வெறும் 36 நொடிகளில் நடந்தேறியது. இந்த தம்பதியினரை தாக்கியவர்கள் கூட்டம் சேரத் தொடங்கியதும் தாங்கள் வந்த மோட்டார் சைக்கிள்களை எடுத்துக்கொண்டு அங்கிருந்து கிளம்பிவிட்டார்கள்.
ரத்த வெள்ளத்தில் இருந்த தம்பதியினரை அழைத்து செல்வதற்காக ஆம்புலன்ஸ் ஒன்று விரைவில் வந்து அவர்களை அழைத்து சென்றது. சம்பவம் நடந்தேறிய பகுதியிலிருந்து 60 கிலோ மீட்டர்கள் தொலைவிலுள்ள மருத்துவமனைக்கு சென்றுகொண்டிருந்த ஆம்புலன்ஸின் மெட்டல் ஸ்ட்ரெச்சரில் கண்பார்வை மங்கிய நிலையில் கௌசல்யா இருந்தார். அப்போது சங்கர் உயிருடனே இருந்தார்.
“எனது மார்பில் உனது கையை வைத்துக்கொள்” என்று சங்கர் கூறியவுடன் கௌசல்யா அவருக்கருகில் சென்றார். அம்புலன்ஸ் மருத்துவமனையை அடைந்த சில நிமிடங்களிலேயே சங்கரின் மூச்சு நின்றது.
மிதமாக ஊட்டச்சத்துக் கொண்ட சங்கரின் உடலில் 34 வெட்டுகளும், காயங்களும் இருந்ததாக மருத்துவர்கள் கூறினார். அதிகளவிலான கத்தி குத்துகள் மற்றும் வெட்டுகளினால் ஏற்பட்ட அதிர்ச்சி மற்றும் ரத்தப்போக்கின் காரணமாக அவர் உயிரிழந்தார்.
கௌசல்யாவின் முகமானது பாண்டேஜ்களால் சூழ்ந்து காணப்பட்டதோடு 36 தையல்களுக்கும், முறிந்த எலும்புக்கான சிகிச்சைக்காக மருத்துவமனையில் இருபது நாட்களை கழித்தார். மருத்துவமனையின் கட்டிலில் இருந்தபடியே போலீசாரிடம் பேசிய கௌசல்யா இந்த சம்பவத்திற்கு தனது பெற்றோரே காரணமென்று கூறினார்.
தாக்குதலுக்கு பிறகு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட கௌசல்யா
தாக்குதலில் ஈடுபட்ட ஒருவர் வெட்டிக் கொண்டே, “அவனை ஏன் காதலித்தாய்?”, “எதற்காக?” என்று கத்திக்கொண்டே இருந்தான்.
சங்கர் ஒரு தலித் (முன்னர் தீண்டத்தகாதவராக அறியப்பட்ட சமுதாயம்), மற்றும் குமாரலிங்கம் கிராமத்தில் ஒரே அறையில் நான்கு குடும்ப உறுப்பினர்களுடன் வாழ்ந்து வந்த ஒரு நிலமற்ற அன்றாட கூலித் தொழிலாளி ஒருவரின் மகன். கௌசல்யா ஒப்பீட்டளவில் செல்வாக்கு பெற்ற தேவார் சாதியை சேர்ந்தவர். 38 வயதான கெளசல்யாவின் தந்தை வட்டிக்கு கடனளித்தும், டாக்ஸி ஆபரேட்டர் பணியும் செய்து வந்தார். சிறிய நகரமான பழனியிலுள்ள ஒரு இரண்டு மாடி குடியிருப்பில் அவர்கள் வாழ்ந்து வந்தனர்.
தான் விமானப் பணிப்பெண்ணாக வேண்டுமென்று கௌசல்யா தனது பெற்றோரிடம் தெரிவித்தார். ஆனால், “தான் குட்டை பாவாடையை அணிய வேண்டியிருக்கும்” என்று கூறியவுடன் அவரது விருப்பத்தை நிராகரித்தனர். 2014-ல் பள்ளி முடிந்தபிறகு, அவர்கள் அவளை மணந்து கொள்ள விரும்பியவர்களை சந்திக்க ஒரு குடும்ப கோயிலுக்கு அழைத்துச் சென்றார்கள். திருமணம் செய்துக்கொள்ள அவர் மறுத்ததால், கணினி அறிவியல் மற்றும் பொறியியலைப் படிப்பதற்காக அவரை ஒரு தனியார் கல்லூரிக்கு அனுப்பி வைத்தனர்.
அவள் கல்லூரியை வெறுத்தாள். “பல கட்டுப்பாடுகள் இருந்தன. நாம் வளாகத்திற்கு வெளியே செல்லமுடியாது, உடன்பயிலும் ஆண் மாணவர்களுடன் பேசமுடியாது என்பதுடன் இருபாலினரும் தனித்தனி வகுப்பறைகளிலேயே உட்கார வைக்கப்பட்டனர். கல்லூரி பேருந்தில் நாங்கள் வெவ்வேறு பகுதிகளில் உட்கார்ந்திருந்தோம். நாங்கள் உடன்பயிலும் ஆண் மாணவர்களுடன் பேசினால் அங்குள்ள காவலாளிகள் எங்களது பெற்றோர்களிடம் தெரிவிப்பார்கள். அது மிகவும் இறுக்கமாக இருந்தது.”
மரியாதைக்குரிய நண்பர்கள்
ஆனால், காதல் எந்த இடத்தில் வேண்டுமானாலும் உண்டாகலாம். கல்லூரியில் புதியதாக சேர்ந்தவர்களுக்கான ஒரு நிகழ்ச்சியின்போது அங்கு வந்த மெலிந்த மற்றும் உயரமாக இருந்த பொறியியல் மாணவர் ஒருவர், அவரிடம் சென்று தனது பெயர் சங்கர் என்று அறியமுகம் செய்துகொண்டதுடன், “நீங்கள் வேறு எவரையாவது காதலிக்கிறீர்களா?” என்று கேட்டார்.
அதிர்ச்சியடைந்த கௌசல்யா பதிலேதும் கூறாமல் அங்கிருந்து நகர்ந்து சென்றுவிட்டார்.
அதற்கடுத்த நாளே, அவரிடம் சென்ற சங்கர் முந்தைய தினம் விடை கேள்வியை எழுப்பினார். “நீங்கள் வேறு எவரையாவது காதலிக்கிறீர்களா? ஏனென்றால் நான் உங்களை காதலிக்கிறேன் என்று நினைக்கிறேன்” என்று சங்கர் கூறியவுடன் கௌசல்யா அங்கிருந்து மீண்டும் நழுவினார்.
மூன்றாவது நாளும் தன்னிடம் வந்த சங்கரிடம், “வேறொரு பெண்ணை பார்த்துக்கொள்” என்று கௌசல்யா கூறினாள். “நாம் வெளியே சென்றால் மற்றவர்களுக்கு தெரிந்துவிடும். உன்னை பற்றி தெரிந்து கொள்வது கடினமாக இருக்கும்” என்று அவர் கூறினார்.
கௌசல்யாவை நிறுத்திவிட்டு தான் காதலிப்பதாக சங்கர் கூறினார். அப்போது “நாங்கள் மரியாதைக்குரிய நண்பர்களைப் போலவே நடந்துகொண்டோம்” என்கிறார் கௌசல்யா. “நான் அவரை காதலித்தேன் என்று சொல்லவில்லை, ஆனால் காலப்போக்கில் அது என்னைத் தூண்டிவிட்டது” என்றார்.
அது கடினமாக வாழ்ந்து பெற்ற காதல். தனியே வெளியே சென்று தொலைபேசியில் பேசமுடியாது என்பதால், அவர்கள் தினமும் கல்லூரி பேருந்தில் செல்லும்போது வாட்ஸ்அப் செயலியின் மூலம் தகவல்களை பகிர்ந்துகொண்டார்கள். இதேபோன்று ஒவ்வொரு நாளும், 18 மாதங்களுக்கு, அவர்கள் கருத்துக்களை எழுத்துக்களாக பரிமாறிக்கொண்டார்கள். அவர்கள் தங்களது நம்பிக்கைகளையும், கனவுகளையும் பற்றி பேசினர்.
“எனக்கு இரண்டு கனவுகள் இருக்கின்றன,” என்று அவர் ஒரு நாள் மெசேஜில் கூறினார். “குடும்பத்திற்கான சரியான வீடு கட்டவும், எப்போதும் உன்னை நேசிப்பதும்.”
இரண்டாவது ஆண்டில், அவர் ஜப்பானிய மொழி வகுப்புக்கு சேர்ந்தார். எனவே, அவர் கல்லூரி நேரத்திற்கு பிறகும் இருந்துவிட்டு வீட்டிற்கு சாதாரண பேருந்தில் பயணிப்பார். சங்கர் அவருக்காக காத்திருப்பார். அவர்களிருவரும் பேருந்தில் பேசிக்கொள்வார்கள்.
ஆனால், 2015ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ஒரு நாள் பஸ் நடத்துனர் ஒருவர் அவர்கள் பேசிக்கொள்வதை கண்டதுடன் கௌசல்யா வசித்து வந்த இடத்தை கண்டறிந்து அவரது தாயிடம் தெரிவித்தார். அதே நாள் மாலை, கௌசல்யாவின் பெற்றோர் சங்கரை அவரது தொலைபேசியிலிருந்து அழைத்து அவர்களுடைய மகளை விட்டு விலகும்படி எச்சரித்தார்கள். சங்கர் “கர்ப்பமாக்கிவிட்டு ஓடிவிடுவார்” என்று அவர்கள் கூறினர். அடுத்த நாள், அவர்கள் கௌசல்யாவை கல்லூரிக்கு அனுப்புவதை நிறுத்திவிட்டனர்.
அவர் இரவு முழுவதும் கதறி அழுதார். அடுத்த நாள் காலையில் அவர் எழுந்தபோது அவருடைய பெற்றோர் வெளியே சென்றிருந்தனர். தனது கைபேசியை கண்டறிந்த கௌசல்யா, உடனடியாக சங்கரை அழைத்து தன்னுடைய பெற்றோருடன் நடந்த சண்டையை பற்றி அவரிடம் கூறினார். தன்னை கர்ப்பமாக்கிவிட்டு ஓடுவதற்கு திட்டமிட்டிருந்தாயா என்று கௌசல்யா சங்கரிடம் கேட்டாள்.
கௌசல்யாவின் தந்தைக்கு (வலதுபுறம் இருப்பவர்) மரண தண்டனை விதித்தும், தாயாரை விடுதலை செய்தும் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
“நீங்கள் அப்படி நினைத்தால், இப்போதே ஓடிப்போய் திருமணம் செய்து கொள்வோம்” என்று சங்கர் கூறினார்.
கௌசல்யா ஒரு பையை எடுத்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியேறி, உள்ளூர் பேருந்து நிறுத்தத்திற்கு சென்றார். அடுத்த நாள், அதாவது 2015 ஆம் ஜூலை 12 ஆம் தேதி அவர்கள் ஒரு கோவில் ஒன்றுக்கு சென்று திருமணம் செய்து கொண்டார்கள். பின்னர் அவர்கள் உள்ளூர் போலீஸ் நிலையத்திற்குச் தங்களது சாதி மறுப்பு திருமணத்தை பற்றி தெரிவித்ததுடன், பாதுகாப்புக்கோரி விண்ணப்பம் செய்தனர்.
அடுத்த எட்டு மாதங்கள், தனது வாழ்க்கையின் “சுதந்திரமான, மகிழ்ச்சியான நேரம்” என்று கௌசல்யா கூறுகிறார். அவர் சங்கரின் குடிசைக்கு குடிபெயர்ந்ததுடன் அவரின் தந்தை, இரு சகோதரர்கள் மற்றும் பாட்டியுடன் இணைந்து வாழ்ந்தார். கல்லூரி படிப்பை நிறுத்திவிட்டு, கடையொன்றில் விற்பனையாளராக வேலை செய்து, மாதம் 5,000 ரூபாய் சம்பாதித்தார்.
அவரது பெற்றோரும் உறவினர்களும் அவர்களை பிரிக்க கடுமையாக முயன்றனர்: சங்கர் தங்களது மகளை கடத்திச் சென்றதாக போலீசில் புகார் அளித்தனர்; அவரது திருமணத்திற்கு ஒரு வாரம் கழித்து, கௌசல்யாவை கடத்தி, சூனியக்காரர்கள் மற்றும் பூசாரிகளிடம் கொண்டு சென்று அவரது முகத்தில் சாம்பல்களை அடித்து கணவரைவிட்டு பிரிந்து வருவதற்குரிய முயற்சிகளை மேற்கொண்டனர். இறுதியில் சோர்வுற்ற அவர்கள் தங்களது முயற்சிகளை கைவிட்டவுடன், சங்கர் அவரை தனது வீட்டிற்கு அழைத்துச் சென்றார். பின்னர், கௌசல்யாவை விட்டு சென்றால் சங்கருக்கு பத்து இலட்சம் ரூபாய் தருவதாக அவர்கள் கூறினர்.
கொலை நடப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு, அவருடைய பெற்றோர் தங்கள் வீட்டிற்கு வந்து அவர்களுடன் வரும்படி அழைத்ததாகவும் தான் அதற்கு மறுப்பு தெரிவித்துவிட்டதாகவும் கௌசல்யா கூறுகிறார்.
‘நாங்கள் பொறுப்பு இல்லை’
“இன்றைக்கு பிறகு உனக்கு எதாவது நடந்தால் அதற்கு நாங்கள் பொறுப்பல்ல” என்று வீட்டிலிருந்து வெளியேறும்போது கௌசல்யாவிடம் அவரது தந்தை கூறினார். ஏற்கனவே பல்வேறு வழக்குகளில் தொடர்புடைய ஐந்து பேருக்கு 50,000 ரூபாய் கொடுத்து தனது மகள் கௌசல்யா மற்றும் சங்கரை கொல்வதற்கு திட்டமிட்ட அவரது தந்தையை போலீசார் கண்டறிந்து கைது செய்தனர்.
கொலைக்கு 120 சாட்சிகள் இருந்தனர். கௌசல்யா தனது பெற்றோரின் பிணையை நீதிமன்றத்தில் 58 முறை எதிர்த்தார். “என் அம்மா என்னைக் கொன்றுவிடுவேன் என்று தொடர்ந்து பலமுறை அச்சுறுத்தினார். அவரை திருமணம் செய்து கொண்டதைவிட நான் இறந்திருந்தால் நன்றாக இருக்கும் என்று சொன்னார்” என கௌசல்யா நீதிபதியிடம் கூறினார்.
கடந்த டிசம்பர் மாதத்தில், கௌசல்யாவின் தந்தை உட்பட ஆறு பேருக்கு நீதிபதி அலமேலு நடராஜன் மரண தண்டனையை விதித்து தீர்ப்பளித்தார். அவரது தாயாரும் குற்றஞ்சாட்டப்பட்ட மற்ற இரண்டு பேரும் விடுவிக்கப்பட்டனர். கௌசல்யா தனது தாயார் விடுவிக்கப்படுவதற்கு எதிராக முறையீடு செய்யவுள்ளார். ஏனெனில், அவரது தாயாரும் சமமான குற்றவாளி என நம்புகிறார்.
சங்கரின் கொலைக்குப் பின்னர் கௌசல்யா தனது வாழ்க்கையை முடித்துக்கொள்ள விரும்புவதாக கூறினார். அதன் பிறகு, அவள் தனது முடியை வெட்டிக்கொண்டு, கராத்தே கற்க ஆரம்பித்ததுடன், சாதி பற்றிய புத்தகங்களை வாசித்தார். மேலும், அவர் சாதி எதிர்ப்பு குழுக்களை சந்தித்து சாதிக் குற்றங்களுக்கு எதிராக பேசினார். தலித்துகளால் பாரம்பரியமாக அடிக்கப்படும் பறையை அவர் கற்றுக் கொண்டார்.
படுகொலைக்கு இழப்பீடாக அரசு வழங்கிய பணத்தில் சங்கரின் குடும்பத்திற்கு அவர் விரும்பியவாறே நான்கு அறைகளை கொண்ட வீட்டை கட்டியதுடன், கிராமத்தில் ஏழை மாணவர்களுக்கான ஒரு பயிற்சி மையத்தையும் தொடங்கியுள்ளார். குடும்பத்தை நடத்த, அரசாங்க அலுவலகத்தில் எழுத்தராக பணிபுரிகிறார். வார இறுதிகளில், அவர் சாதி, கௌரவ கொலைகளுக்கு எதிரான கூட்டங்களில் பேசி, “அன்பின் முக்கியத்துவத்தை” வலியுறுத்தி தமிழ்நாடு முழுவதிலும் பயணித்து வருகிறார்.
“தண்ணீரை போன்று காதல் என்பதும் ஒரு இயற்கையானது” என்று அவர் கூறுகிறார். “காதல் நடக்கும், சாதிய முறைகள் நிறுத்தப்பட வேண்டுமென்றால் பெண்களுக்கு சாதி முறையை எதிர்த்து போராட வேண்டும்” என தனது ஃபேஸ்புக் பக்கத்தில் அவர் தெரிவித்துள்ளார். பலருக்கு கௌசல்யாவின் பிரச்சாரம் பிடிக்கவில்லை என்பதால் அவரது ஃபேஸ்புக் பக்கத்திலேயே கொலை மிரட்டல்களை விடுகின்றனர் என்பதால் அவருக்கு போலீஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
சங்கர் இறந்தபிறகு மருத்துவர்கள் அவர் பயன்படுத்திய கைபேசியை கௌசல்யாவிடம் வழங்கினர். அதில் அவர்களின் பற்று மிகுந்த காதல் வாழ்க்கையின் பல நினைவுகள் இருந்தன.
சௌதிக் பிஸ்வாஸ் – பிபிசி