வடமாகாணத்தில் தொண்டர் ஆசிரியர்களாகவும் ஒப்பந்த அடிப்படையில் ஆசிரியர்களாகவும் பணியாற்றுவோருக்கு நிரந்தர நியமனம் வழங்கப்படவுள்ளதாக கொழும்பு இணையத்தளம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பான வைபவம் எதிர்வரும் 15 ஆம் திகதி அலரிமாளிகையில் நடைபெறவுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வமான தகவல்கள் எதனையும் சம்பந்தப்பட்ட தரப்பினர் வெளியிடவில்லை.
2009ஆம் ஆண்டு காலப்பகுதிக்கு முன்னர் சுமார் பத்தாண்டு காலம் தொண்டர் ஆசிரியர்களாக கடமையாற்றிய 182 பேருக்கும், அதற்கு சமமான காலத்தில் ஒப்பந்த அடிப்படையில் பணியாற்றிய 142 ஆசிரியர்களுக்கும் இவ்வாறு நியமனம் வழங்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
வடமாகாண ஆளுநர் ரெஜினோல்ட் குரேயின் வேண்டுகோளை அடுத்து கல்வி அமைச்சர் அகிலவிராஜ் காரியவசம் மூலம் முன்வைக்கப்பட்ட குறித்த நியமனம் தொடர்பான யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த செய்தி தமக்கு மகிழ்ச்சி அளிப்பதாகவும் இது தொடர்பில் உறுதிப்படுத்த முடியாத நிலை காணப்புடுவதாகவும் கூறுகின்ற கிளிநொச்சியை சேர்ந்த தொண்டர் ஆசிரியர் ஒருவர், தேர்தல் காலத்தில் இச் செய்தி வெளியாகியிருப்பது குறித்தும் அவதானம் செலுத்த வேண்டும் என்றும் கூறுகின்றார்.
எதிர்வரும் 10ஆம் திகதி உள்ளுராட்சித் தேர்தல் இடம்பெறவுள்ள நிலையில் 15ஆம் திகதி அலரி மாளிகையில் நியமன நிகழ்வு இடம்பெறவுள்ளதாக உறுதிப்படுத்தப்படாத செய்தியை குறித்த இணையம் வெளியிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.